திருப்தி இல்லாவிடில் மீண்டும் ஈரான் மீது குண்டுமழை பொழியும்
ஈரான் நாட்டுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள புதிய போர்நிறுத்த ஒப்பந்தம் இறுதியானது அல்ல எனவும், இதில் தமக்கு திருப்தி இல்லாவிடில் மீண்டும் போரைத் தொடங்கத் தயங்கப்போவதில்லை எனவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பிரான்ஸ் நாட்டின் எவியன்-லெஸ்-பெய்ன்ஸ் நகரில் நடைபெற்று வரும் ஜி7 (G7) உச்சி மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது வெறும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் மட்டுமே. இதில் எனக்கு உடன்பாடு இல்லை என்றாலோ, அல்லது ஈரான் முறையாக நடந்து கொள்ளவில்லை என்றாலோ, நாங்கள் மீண்டும் போருக்குத் திரும்புவோம் என தெரிவித்துள்ளார்.

மேலும் ஈரானியர்களின் தலைகள் மீது மீண்டும் குண்டுகளை வீசுவோம் என டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மூன்று நாட்களுக்கு முன்பு எட்டப்பட்ட இந்த தற்காலிக ஒப்பந்தம், எதிர்வரும் வெள்ளிக்கிழமை சுவிட்சர்லாந்து எல்லையில் நடைபெறும் அதிகாரப்பூர்வ நிகழ்வில் கையெழுத்தாக உள்ளது.
இந்த ஒப்பந்தத்தின்படி, கடந்த ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்ட போர்நிறுத்தம் மேலும் 60 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டு, நிரந்தர அமைதிக்கான பேச்சுவார்த்தைக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான இந்த போர்நிறுத்த ஒப்பந்தத்தை பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய ஜி7 நாட்டுத் தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.
மேலும், லெபனானில் இஸ்ரேலுக்கும் ஈரானின் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பிற்கும் இடையே உடனடியாக போர்நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். எ
னினும், இந்த பேச்சுவார்த்தைகளில் பங்குபெறாத இஸ்ரேல், லெபனானில் தனது தாக்குதல்களைத் தொடர்ந்து வருகிறது. புதன்கிழமையன்று தெற்கு லெபனானின் நபடியே உள்ளிட்ட பல நகரங்களில் இஸ்ரேல் வான்வழி மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தியதாக லெபனான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஹிஸ்புல்லா நடத்திய ட்ரோன் தாக்குதலில் தனது வீரர்கள் ஐந்து பேர் காயமடைந்ததாக இஸ்ரேல் தரப்பு ஒப்புக்கொண்டுள்ளது. தொடர் தாக்குதல்களால், வீடுகளைப் பார்க்க வந்த லெபனான் மக்கள் மீண்டும் இடம்பெயர்ந்து ஓடும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
அதிபர் டிரம்ப் இந்தப் போரின் தொடக்கத்தில் அறிவித்த இலக்குகள் எதையும் இன்னும் முழுமையாக எட்டவில்லை என்றே அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.
ஈரானின் ஆட்சி மாற்றம், செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பை அழிப்பது, பாலிஸ்டிக் ஏவுகணைகளை முடக்குவது மற்றும் ஹிஸ்புல்லா போன்ற அமைப்புகளுக்கான ஆதரவை ஏற்பதை தடுப்பது போன்ற அமெரிக்காவின் முக்கிய நோக்கங்கள் இன்னும் நிறைவேறவில்லை.
இருப்பினும், ஈரான் அணு ஆயுதம் தயாரிக்காது என்று இந்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளதாக டிரம்ப் குறிப்பிடுகிறார்.
ஆனால், இது 1970-களில் இருந்தே ஈரானின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஒப்பந்தம் அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் நடக்கவிருக்கும் இடைத்தேர்தலில் டிரம்பிற்கு அரசியல் ரீதியான விமர்சனங்களை ஏற்படுத்தக்கூடும் என அஞ்சப்படுகிறது.
மறுபுறம், இந்த ஒப்பந்தத்தை ஈரான் அரசு தங்களின் ராஜதந்திர வெற்றியாகக் கொண்டாடினாலும், பல மாத காலப் போரினாலும் பொருளாதார வீழ்ச்சியினாலும் அந்நாட்டு சாதாரண மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
இதற்கிடையில், இந்த போர்நிறுத்தச் செய்தியால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவைச் சந்தித்துள்ளது. பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 80 டாலருக்கும் கீழ் குறைந்துள்ளது, இது அமெரிக்கா-ஈரான் மோதல் தொடங்கியதில் இருந்து பதிவான மிகக் குறைந்த விலையாகும்.
முதலமைச்சர் மகனை திருமணம் செய்துகொண்ட நடிகை.. 11 நாட்களில் இறந்த கணவர்! இவர் வாழ்க்கையில் இவ்வளவு சோகமா Cineulagam
பிரித்தானிய கடற்கரைக்கு அருகே எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்திய ரஷ்ய போர்கப்பல்., நடந்தது என்ன? News Lankasri