ட்ரம்பிற்கு இத்தாலி பிரதமர் மெலோனி ஆவேசப் பதில்
பிரான்சில் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டின் போது, இத்தாலி பிரதமர் ஜோர்ஜியா மெலோனி தன்னிடம் வந்து "புகைப்படம் எடுக்க கெஞ்சினார்" என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறிய கருத்து, இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையே பெரும் அரசியல் மோதலை உருவாக்கியுள்ளது.
ட்ரம்பின் இந்த கூற்றை முற்றிலுமாக மறுத்துள்ள இத்தாலி பிரதமர் மெலோனி, இது முற்றிலும் கற்பனையான ஒரு கதை என்று சாடியுள்ளார்.
இராஜதந்திர மோதலின் வெளிப்பாடு
மேலும், "மேற்கத்திய நாடுகளின் எதிரிகளிடம் மென்மையான போக்கைக் கடைப்பிடிக்கும் அமெரிக்க ஜனாதிபதி, நட்பு நாடுகளிடம் இப்படி நடந்து கொள்வது வருத்தமளிக்கிறது.

ஆனால் அவர் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும், நானோ அல்லது இத்தாலியோ யாரிடமும் ஒருபோதும் பிச்சை எடுக்க மாட்டோம்" என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆவேசமாகப் பதிவிட்டுள்ளார்.
இத்தாலியின் 'லா7' தொலைக்காட்சிக்கு டொனால்ட் ட்ரம்ப் அளித்த தொலைபேசி நேர்காணலில், "மெலோனி என்னுடன் புகைப்படம் எடுக்கக் கெஞ்சியதால், அவர் மீது பரிதாபப்பட்டு நான் அதற்குச் சம்மதித்தேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.
அமெரிக்காவின் ஈரான் போருக்கு இத்தாலி எதிர்ப்பு தெரிவித்தது, மற்றும் போப் ஆண்டவரை ட்ரம்ப் விமர்சித்தபோது மெலோனி அதற்கு கண்டனம் தெரிவித்தது போன்ற அடுத்தடுத்த சம்பவங்களால் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு ஏற்கனவே விரிசலடைந்துள்ளது.
ட்ரம்பின் இந்த அவதூறான கருத்துக்கு இத்தாலி ஜனாதிபதி செர்ஜியோ மத்தாரெல்லா மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் உட்பட ஒட்டுமொத்த இத்தாலிய அரசியல்வாதிகளும் மெலோனிக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளனர்.
இந்த இராஜதந்திர மோதலின் வெளிப்பாடாக, அடுத்த வாரம் திட்டமிடப்பட்டிருந்த தனது அமெரிக்கப் பயணத்தை இத்தாலிய வெளியுறவு அமைச்சர் அன்டோனியோ தஜானி அதிரடியாக இரத்து செய்துள்ளார்.