சர்வதேசங்களின் எதிர்பார்ப்பு.. உக்ரைன் - ரஷ்ய போர் நிறுத்தத்தின் நிலை..!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கும் ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கும் இடையிலான சந்திப்பு, உக்ரைன் போர்நிறுத்தம் தொடர்பில் எந்த முடிவும் இன்றி நிறைவடைந்துள்ளது.
அமெரிக்காவின் அலாஸ்காவில் இடம்பெற்ற இந்த சந்திப்பு சுமார் 3 மணித்தியாலங்களாக நீடித்துள்ளது.
இந்தநிலையில் சந்திப்பில் இணக்கங்கள் எட்டப்படா விட்டாலும், பேச்சுவார்த்தை சுமுகமாக இருந்தது என்று ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
ஜெலென்ஸ்கியின் பங்கேற்பு..
அதேநேரம், உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவதில் தாம் விருப்பத்துடன் இருப்பதாக புடின் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பேச்சுவார்தைக்கு ஐரோப்பிய தலைவர்கள் மற்றும் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி ஆகியோர் அழைக்கப்படுவார்கள் என்றும், இறுதி உடன்பாடு அவர்களிலேயே தங்கியுள்ளதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் மீண்டும் தமக்கிடையிலான ஒரு சந்திப்பு விரைவில் இடம்பெறும் என்றும் அது மொஸ்கோவில் இடம்பெறும் என்றும் புடின் குறிப்பிட்டுள்ளார்.
உடன் புறப்பட்ட புடின்
உக்ரேனியர்களும் ஐரோப்பியர்களும் சமாதான முன்னெடுப்புகளில் தலையிட மாட்டார்கள் என்று தான் நம்புவதாகவும் அவர், ட்ரம்புடனான சந்திப்பின் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
உக்ரைன் மற்றும் ரஸ்யாவுக்கு இடையில் ஏற்பட்டுள்ள மோதலுக்கான முதன்மைக் காரணங்களை அகற்ற வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை சந்திப்பின் பின்னர் இரண்டு ஜனாதிபதிகளும் செய்தியாளர்களின் கேள்விகளுக்கும் பதிலளிக்கவில்லை. இதனையடுத்து புடின் உடனடியாகவே ரஸ்யாவுக்கு புறப்பட்டு சென்றதாக சர்வதேச செய்திகள் கூறுகின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




