ட்ரம்ப் - ஜெலென்ஸ்கி சந்திப்பு.. விரைவில் முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கை
சர்வதேசத்தினால் எதிர்பார்க்கப்பட்ட ட்ரம்ப் - ஜெலென்ஸ்கி சந்திப்பும் முடிவடைந்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனாட் ட்ரம்புக்கும் உக்ரேனிய ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் இடையிலான சந்திப்பு சிறப்பாக முடிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனுக்கான பாதுகாப்பு உத்தரவாதங்கள் ஐரோப்பிய நாடுகளால் அமெரிக்காவின் ஒருங்கிணைப்புடன் வழங்கப்படும் என்று ட்ரம்ப் இதன்போது உறுதியளித்ததாக ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
இந்த சந்திப்பின்போது ஐரோப்பிய தலைவர்களும் ஜெலேன்ஸ்கிக்கு ஆதரவாக பங்கேற்றமை முக்கிய அம்சமாக அமைந்திருந்தது.
சிறப்பான சந்திப்பு
வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் பின்னர் செய்தியாளர்களுக்கு கருத்துரைத்த ஜெலென்ஸ்கி, பாதுகாப்பு உத்தரவாதங்கள் உட்பட முக்கியமான விடயங்கள் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் இடம்பெற்ற சந்திப்பு சிறப்பானது என்று குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம் அடுத்தக்கட்டமாக ரஸ்ய ஜனாதிபதி புடினை இருதரப்பு ரீதியாக சந்திக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, அமெரிக்காவில் தங்கியிருக்கும் போதே, ட்ரம்ப், ரஸ்ய ஜனாதிபதி புடினுடன் தொலைபேசி கலந்துரையாடலை நடத்தியுள்ளார்.
உக்ரைன் ஜனாதிபதிக்கும் ரஸ்ய ஜனாதிபதிக்கும் இடையில் நேரடியான சந்திப்பை ஏற்பாடு செய்யும் முகமாகவே இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
எனினும் இந்த கலந்துரையாடலின் முடிவுகள் வெளியாகவில்லை. இதற்கிடையில் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான போர் நிறுத்தத்தை ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் கோரியுள்ளபோதும், ட்ரம்ப் அது அவசியம் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



