நேட்டோவுக்கு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை
ஈரான் போர் மற்றும் ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் நேட்டோ பொதுச்செயலாளர் மார்க் ரூட்டே (Mark Rutte) ஆகியோர் வொஷிங்டனில் சந்தித்துப் பேசியுள்ளனர்.
இந்தச் சந்திப்பின் போது, ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தை உறுதி செய்ய நேட்டோ உறுப்பு நாடுகள் அடுத்த சில நாட்களில் உறுதியான வாக்குறுதிகளையும் பங்களிப்பையும் வழங்க வேண்டும் என்று ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
ட்ரம்ப் உடனான சந்திப்பு
இது குறித்து ஐரோப்பிய தூதரக அதிகாரிகள் கூறுகையில், ஈரானுடனான போரில் அமெரிக்காவிற்குப் போதுமான ஆதரவை வழங்காத நேட்டோவை ஒரு "காகிதப் புலி" என்று ட்ரம்ப் விமர்சித்துள்ளதோடு, கூட்டணியிலிருந்து வெளியேறப் போவதாகவும் அச்சுறுத்தியுள்ளதாகத் தெரிவித்தனர்.
நேட்டோ நாடுகள் அமெரிக்காவின் பாதுகாப்பை மட்டும் நம்பியிருப்பதாகவும், ஆனால் இக்கட்டான சூழலில் உதவ முன்வருவதில்லை என்பதும் ட்ரம்ப்பின் முக்கியக் குற்றச்சாட்டாக உள்ளது.

ட்ரம்ப் உடனான சந்திப்பிற்குப் பிறகுப் பேசிய மார்க் ரூட்டே, பல நேட்டோ நட்பு நாடுகள் மீது ஜனாதிபதி ட்ரம்ப் அதிருப்தியில் இருப்பதை நியாயப்படுத்தினார்.
நிரந்தர அமைதி ஒப்பந்தம் ஏற்படும் வரை
இதற்கிடையில், ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான இராணுவ மற்றும் இராஜதந்திரத் திட்டங்களை உருவாக்கப் பிரித்தானியா தலைமையில் சுமார் 40 நாடுகள் கொண்ட குழு முயற்சி செய்து வருகிறது.
சுமார் 15 நாடுகள் கப்பல் போக்குவரத்தை எளிதாக்கத் திட்டமிட்டு வருவதாகப் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரோன் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், ஹோர்முஸ் நீரிணையைப் பயன்படுத்த ஈரான் "சுங்கக் கட்டணம்" (Toll) வசூலிக்க விரும்புவதைப் பிரித்தானியாவும் இத்தாலியும் ஏற்க மறுத்துள்ளன.
அமெரிக்கா - ஈரான் இடையே நிரந்தர அமைதி ஒப்பந்தம் ஏற்படும் வரை ஹோர்முஸ் நீரிணையை முழுமையாகத் திறப்பது கடினம் எனத் தெரிகிறது. இந்தச் சூழல் நேட்டோ நாடுகளிடையே மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.
you may like this