ஈரானின் கண்ணியமற்ற செயல்! ஹோர்முஸ் குறித்து மீண்டும் கொந்தளிக்கும் ட்ரம்ப்
ஹோர்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் கொண்டு செல்வதை அனுமதிப்பதில் ஈரான் மிக மோசமான முறையில் செயல்படுகிறது என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
சற்று முன்னர், ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியாக எண்ணெய் கப்பல்கள் செல்வதை ஈரான் கையாளும் விதம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.
குறித்த பதிவில், "ஹோர்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் கொண்டு செல்வதை அனுமதிப்பதில் ஈரான் மிக மோசமான முறையில் செயல்படுகிறது. இது கண்ணியமற்ற செயல் என்று கூட சொல்லலாம். இது நாம் செய்துகொண்ட ஒப்பந்தம் அல்ல!" என தெரிவித்துள்ளார்.
மீண்டும் வலுக்கும் முரண்பாடு
ஹோர்முஸ் வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு ஈரான் சட்டவிரோதமாக "சுங்கக் கட்டணம்" (Toll fees) வசூலிப்பதாக முறைப்பாடுகள் எழுந்துள்ளன.
நீரிணையை தாண்டிச் செல்ல ஈரானிய கடற்படையிடம் முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும் என்றும், மீறினால் கப்பல்கள் அழிக்கப்படும் என்றும் ஈரான் எச்சரித்திருந்தது.
கடந்த 8 அன்று எட்டப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தின்படி, ஈரான் ஹோர்முஸ் நீரிணையை "முழுமையான மற்றும் பாதுகாப்பான" முறையில் உடனடியாகத் திறக்க வேண்டும்.
ஆனால், தற்போது ஈரான் விதிக்கும் புதிய கட்டுப்பாடுகள் ஒப்பந்தத்திற்கு எதிரானது என ட்ரம்ப் திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஈரான் தற்போது, ஹோர்முஸ் நீரிணை நிர்வாகம் புதிய முறையில் இருக்கும் என அறிவித்துள்ள நிலையில் அதற்கு ட்ரம்ப் கடும் எதிர்ப்புக்களை வெளியிட்டுள்ளார்.