சர்ச்சையில் சிக்கிய டொனால்டு டிரம்ப்...! குளியலறையில் சிக்கிய இரகசிய ஆவண வழக்கில் அதிரடி தீர்ப்பு
அமெரிக்கா முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் ஆட்சி கால இரகசிய ஆவணங்கள் குளியலறையில் சிக்கிய விவகாரம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் தோல்வியை தழுவிய நிலையில் தனது குடும்பத்துடன் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறி புளோரிடாவில் உள்ள தனது கடற்கரை வீட்டில் குடியேறியிருந்தார்.
அமெரிக்கச் சட்டத்தின்படி ஜனாதிபதிகள் தங்களின் பதவிக் காலம் முடிந்ததும் தாங்கள் கையாண்ட அனைத்து ஆவணங்களையும் ஆவணக் காப்பகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்ற சட்டத்திற்கு புறம்பாக டிரம்ப் நூற்றுக்கணக்கான இரகசிய ஆவணங்களை தன்னுடன் எடுத்து சென்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனை டொனால்ட் டிரம்ப் திட்டவட்டமாக மறுத்து வந்த நிலையில் அமெரிக்க நீதித்துறை இது குறித்து விசாரணையை தொடங்கியிருந்தது.
இரகசிய ஆவணங்கள் கைப்பற்றல்
இந்த நிலையில் நீதிமன்றில் பதிவு செய்யப்பட்ட குற்றச்சாட்டில் டிரம்ப் வீட்டில் இருந்து அதி முக்கியம் வாய்ந்த இரகசிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
100-க்கும் மேற்பட்ட இரகசிய ஆவணங்கள் மற்றும் 11 ஆயிரம் அரசு ஆவணங்கள் டிரம்ப் வீட்டின் குளியலறை மற்றும் அறையில் பாதுகாப்பற்ற முறையில் வைத்து கையாண்டதாகவும் விசாரணை அதிகாரிகளிடம் பொய் கூறியதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
இந்த நிலையில் நேற்று இரகசிய ஆவணங்கள் தொடர்பான விசாரணைக்காக மியாமி நகர நீதிமன்றில்,டொனால்டு டிரம் மற்றும் அவரது முன்னாள் உதவியாளர் வால்ட் நவுடாவும் முன்னிலையாகியுள்ளனர்.
இதன்போது இவர்கள் இருவரையும் மியாமி நகர பொலிஸார் கைது செய்து அவர்களின் கை ரேகைகளை டிஜிட்டல் முறையில் பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கு விசாரணையின் போது டிரம்ப் தன் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் ஏற்க மறுத்ததையடுத்து அரசு தரப்பின் வாதங்களை கேட்டறிந்த நீதிபதி, டிரம்ப் மற்றும் வால்ட் நவுடா ஆகிய இருவருக்கும் எந்தவித நிபந்தனையும் இன்றி பிணை வழங்கி விடுவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |