திருகோணமலை துறைமுகம் இந்தியாவுக்கு சொந்தமாகி விடும்! - பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்கங்கள்
திருகோணமலை எண்ணெய் களஞ்சிய தொகுதியை நிர்மாணிப்பதற்காக முன்வைக்கப்பட்டுள்ள திட்டத்தின் ஊடாக திருகோணமலை துறைமுகமும் இலங்கைக்கு இல்லாமல் போகும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த பாலித, பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் விஜேசிங்க கூறுவது என்ன?.
திருகோணமைலை துறைமுகத்திற்கு சொந்தமான 500 ஏக்கர் காணியில் முதல் கட்டமாக 100 ஏக்கர் காணியை மூன்று கட்டங்களாக 10.2 பில்லியன் ரூபாயை செலவிட்டு 24 எண்ணெய் தாங்கிகளை நிர்மாணிக்க உள்ளதாக கூறுகிறார்.
மூலோபாய திட்டமிடல் மற்றும் செயற்திறன் முகாமைத்துவத்தை ஏற்படுத்த உள்ளனராம். இதனை செய்ய 10 மில்லியன் டொலர்களாவது செலவாகும்.
24 எண்ணெய் தாங்கிகளை நிர்மாணித்து, கட்டிடத்தை நிர்மாணித்து 10 பில்லியன் ரூபாய் செலவில் கடலுக்குள் குழாய் பதிக்க உள்ளனராம். இதன் மூலம் திருகோணமலை துறைமுகத்தை நாம் இழப்பது மாத்திரமல்ல அது இந்தியாவுக்கு சொந்தமாகி விடும்.
இந்த நிறுவனத்தை இலங்கை அரசே ஏற்படுத்தவுள்ளதாக விஜேசிங்க கூறுகிறார். துறைமுக அதிகார சபையும் இந்திய எண்ணெய் நிறுவனமும் இணைந்து இந்த நிறுவனத்தை ஏற்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இப்படியான அதிகாரத்தை யார் இந்த அரசாங்கத்திற்கு வழங்கியது. அமைச்சரவையில் இது பற்றி கலந்துரையாடப்பட்டதா? எனவும் ஆனந்த பாலித மேலும் குறிப்பிட்டுள்ளார்.




