திருகோணமலையில் இரகசிய அறையில் 18 ஆண்டுகளுக்கு முன் நடந்த இரட்டைப் படுகொலை! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
திருகோணமலையில் கடந்த 2008ஆம் ஆண்டு இரண்டு பெண்கள் கடத்திச் செல்லப்பட்டு, கடற்படை முகாமில் உள்ள இரகசிய நிலத்தடி அறையில் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் மூன்று கடற்படை அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பில் வைத்து கடந்த திங்கட்கிழமை (19) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் (CID) கைது செய்யப்பட்ட மூவரையும் எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிவான் நீதிமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை (20) உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவு
திருகோணமலை நீதிவான் நீதிமன்ற நீதவான் எம்.எஸ்.எம். சம்சுதீன் முன்னிலையில் சந்தேகநபர்கள் முன்னிலைப்படுத்தப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2008ஆம் ஆண்டு மே மாதம், திருகோணமலை பாலையூற்று பகுதியில் வைத்து மேரி டெல்ஷியா மற்றும் சசிகுமார் தேன்மொழி ஆகிய இரு பெண்கள் வெள்ளை வானில் கடத்திச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

பின்னர், திருகோணமலை கடற்படை முகாமில் 'கன்சைட்' (Gunside) என அழைக்கப்படும் இரகசிய நிலத்தடி அறையில் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
விசாரணை
இந்த விசாரணைகளின் அடிப்படையில், இம்மாதம் 5ஆம் திகதி கே.எச். கீத்திக்கா சந்தமாலி மற்றும் எம். அருணி தினிஷா ஆகிய இரு பெண் கடற்படையினர் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து, ஞானசேகரம் றொபட், பி.எச். சந்திரசிறி, எம்.வி.கே. சமிந்த குமார மற்றும் பி.டபிள்யூ.எஸ். ஞானக்குமார ஆகிய நான்கு கடற்படையினரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மாத்தளை, பூஸ்ஸ மற்றும் பதுளை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஓய்வுபெற்ற கடற்படையின் நிர்வாகப் பிரிவைச் சேர்ந்த கீழ்நிலை அதிகாரிகளான எம்.எச். அருண துசார மென்டிஸ், கே. சீ. சுரேக டி சில்வா மற்றும் ஆர்.எம்.யூ. குமார ரத்நாயக்க ஆகிய மூவரும் கடந்த திங்கட்கிழமை (19) கைது செய்யப்பட்டனர்.
இவர்களையும் நீதிமன்றம் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் இதுவரை இரண்டு பெண் கடற்படையினர் உட்பட ஒன்பது கடற்படையினர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
ஈழப் போராட்டத்தில் யோதலிங்கம் கிளர்ச்சியின் குறியீடு 13 மணி நேரம் முன்
அமெரிக்கா மீண்டும் தாக்கினால்., இந்த 9 நாடுகளின் மீது தாக்குதல் நடத்தப்படும்: ஈரான் எச்சரிக்கை News Lankasri
மனைவியுடன் ஏற்பட்ட தகராறு: 1700 அடி மலையில் இருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்ட கணவன் News Lankasri