திருகோணமலையில் வெவ்வேறு விபத்து - மூவர் வைத்தியசாலையில் அனுமதி
திருகோணமலையில் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் படுகாயமடைந்த நிலையில் இருவர் திருகோணமலை பொதுவைத்தியசாலையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திருகோணமலை - உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாம்பல்தீவு பாலத்துக்கு அருகில் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்தவர் டிமோ பட்டா லொறியுடன் மோதியதில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அனுமதிக்கப்பட்டவர் நிலாவளி கோனேசபுரி பகுதியைச் சேர்ந்த கே. கணேசன் (64 வயது) எனவும் தெரியவருகின்றது.
விபத்திற்கான காரணம்
குறித்த வயோதிபர் மதுபோதையில் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த போது நேராக வந்த லொறியுடன் மோதியதாகவும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் நேரத்தில் மதுபோதையில் இருந்ததாகவும் வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்தார்.
இதேவேளை, திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜமாலியா பகுதியில் துவிச்சக்கர வண்டி மற்றும் முச்சக்கர வண்டி மோதி விபத்துக்குள்ளானதில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த ஜமாலியா பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய ஜே.முபீத் என்பவர் காயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கம்பகொட்ட பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த கடற்படை உத்தியோகத்தர் நிறுத்தி வைக்கப்பட்ட முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் காயம் ஏற்பட்ட நிலையில் 1990 அவசர நோயாளர் காவு வண்டி மூலமாக அழைத்து வரப்பட்டு மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதன்போது குறித்த கடற்படை வீரர் மது போதையில் இருந்ததாகவும், கஹடகஸ்திகிலிய பகுதியைச் சேர்ந்த 39 வயதுடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்துடன் தொடர்புடைய சாரதிகளை கைது செய்துள்ளதாகவும் விபத்து
தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.