இறுதி தமிழன் இருக்கும் வரை அஞ்சலி நிகழ்வுகள் நடந்தேயாகும் - க.சத்தியசீலன்
தடைகள் மூலம் எமது நினைவுகளைத் தடுத்துவிடலாம் என அரசாங்கம் நினைக்கின்றது. ஆனால் இந்த நாட்டில் இறுதி தமிழன் இருக்கும் வரையில் தமிழ் மக்களுக்காக உயிர் நீத்த உறவுகளை அஞ்சலிக்கும் நிகழ்வுகள் நடந்தேயாகும் என மட்டக்களப்பு மாநகரசபையின் பிரதி முதல்வர் க.சத்தியசீலன் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலை இயக்கத்தின் 38வது வீர மக்கள் தின நிகழ்வு இன்றைய தினம் மட்டக்களப்பில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் மத்தியக்குழு உறுப்பினரும், மட்டக்களப்பு மாநகரசபையின் பிரதி முதல்வருமாகிய க.சத்தியசீலன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
இந்நிகழ்வில் மண்முனை தென்எருவில்பற்று பிரதேச சபைத் தவிசாளர் ஞா.யோகநாதன், போரதீவுப்பற்று பிரதேச சபைத் தவிசாளர் க.ரஜனி, மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர்கள் என மட்டுப்படுத்தப்பட்ட அளவினர் கலந்து கொண்டுள்ளனர்.
1983ம் ஆண்டு ஜூலை கலவரத்தின் போது தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் குட்டிமணி மற்றும் தளபதி தங்கதுரை ஆகியோர் கைது செய்யப்பட்டு வெலிக்கடை சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.
அவர்கள் உட்படப் படுகொலை செய்யப்பட்டிருந்த 53 அரசியற் கைதிகளையும் நினைவுகூரும் முகமாகத் தமிழீழ விடுதலை இயக்கத்தினால் ஜூலை 25 தொடக்கம் 27 வரையில் வீரமக்கள் தினமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
இந்நிகழ்வினை நடாத்துவதற்குத் தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் மற்றும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் உபதலைவரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் ஆகியோருக்கு நீதிமன்றத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் அவர்களின் பங்குபற்றுதல் இல்லாமல் மேற்படி நிகழ்வு இடம்பெற்றிருந்தது.
இதன் போது பிரதேச சபைகளின் தவிசாளர்களினால் குட்டிமணி, தங்கதுரை ஆகியோரின் திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு உறுப்பினர்களால் சுடரேற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன் போது மாநகர பிரதி முதல்வர் கருத்துத் தெரிவிக்கையில்,
எமது இனத்தின் விடுதலைக்காக, எமது தமிழ் மக்களுக்காக இன்னுயிரைக் கொடுத்த எமது தலைவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வானது கடந்த காலங்களில் எவ்வித தடங்கலும் இன்றி மேற்கொள்ளப்பட்டு வந்தது.
ஆனால் இந்த அரசாங்கத்தினால் தமிழர்கள் தொடர்பான எவ்வித நிகழ்வுகளையும் நடாத்த அனுமதிக்கவில்லை. எமது நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் மற்றும் கட்சியின் உபதலைவர் பிரசன்னா இந்திரகுமார் ஆகியோருக்கு இந்நிகழ்வினை நடாத்துவதற்கு நீதிமன்றத்தின் மூலம் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் கட்சியின் பிரதிநிதிகளாகிய எம்மால் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு நடாத்தப்படுகின்றது.
நாட்டின் சட்டதிட்டங்கள் மற்றும் கோவிட் நிலைமைகளைக் கருத்திற்கொண்டு சுகாதார நடைமுறைகளைப் பேணி இந்நிகழ்வினை நாம் நடாத்துகின்றோம். தடைகள் மூலம் எமது நினைவுகளைத் தடுத்துவிடலாம் என அரசாங்கம் நினைக்கின்றது.
ஆனால் இந்த நாட்டில் இறுதி தமிழன் இருக்கும் வரையில் தமிழ் மக்களுக்காக உயிர் நீத்த உறவுகளை அஞ்சலிக்கும் நிகழ்வுகள் நடந்தேயாகும் என தெரிவித்துள்ளார்.






ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri
