இராணுவ செலவு மற்றும் சர்வதேச குற்றங்களுக்கான பொறுப்புக்கூறல் தொடர்பில் பரீஸ் கிளப்பிடம் கோரிக்கை
இலங்கைக்கான கடன் மறுசீரமைப்பு மற்றும் உதவிகளை இராணுவ செலவு மற்றும் சர்வதேச குற்றங்களுக்கான பொறுப்புக்கூறலுடன் இணைக்குமாறு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், பரீஸ் கிளப்பிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
பரீஸ் கிளப்பின் உதவி பொதுச்செயலாளர் டுபெராட்டுக்கு எழுதிய கடிதத்தில், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதானி வீ. ருத்திரகுமாரன் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
இலங்கையின் சர்வதேச நியமங்களுக்கு அமைவாக சர்வதேச குற்றங்களுக்கு பொறுப்புக்கூற வேண்டும் என ருத்ரகுமாரன் தமது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இராணுவ செலவு
போரின் போது இலங்கை தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.3வீத இராணுவ செலவினங்களுக்கு ஒதுக்கியது.ஈழப் போர் மூன்று இடம்பெற்ற காலமான 1995 முதல் 2002ஆம் ஆண்டு வரை இடம்பெற்றபோது 1.3 மில்லியன் டொலர்களும், சமாதான காலமான 2002 முதல் 2005 வரையில் 1.5 மில்லியன் டொலர்களும், ஈழப் போர் 4 இடம்பெற்ற காலமான 2006 முதல் 2009 வரை 1.5 மில்லியன் டொலர்கள் ஒதுக்கப்பட்டன.
2009 இல் யுத்தம் முடிவடைந்த பின்னரும், இலங்கை தனது இராணுவத்தை உயரடுக்கு சிறப்பு அதிரடிப்படை, பொலிஸாருடன் தொடர்ந்து விரிவுபடுத்தி இன்று தனது வருடாந்த செலவினத்தில் 11வீதத்தில் பாதுகாப்புக்காக ஒதுக்கி வருகின்றது.
இதன்படி உண்மையான இராணுவ செலவு யுத்த காலத்தை விட 1.7 மில்லியன் டொலர்கள் அதிகம் என நாடு கடந்த தமிழீழு அரசாங்கத்தின் பிரதானி ருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.
தமிழர் நிலத்தில் இராணுவ ஆக்கிரமிப்பு
ஓய்வுபெற்ற இராணுவத்தினருக்கான ஓய்வூதிய கொடுப்பனவுகளுக்காக மட்டும் 170 மில்லியன் டொலர்களை செலவிட்டதன் மூலம், 99 வீதமான இராணுவத்தினரை சேவையில் வைத்திருக்கும் உலக நாடாக இலங்கை மாறியுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை அரசாங்கம், போருக்குப் பிறகும், பாதுகாப்புப் பணியாளர்களின் வேதனத்தை 45வீதம் உயர்த்தி, தமிழர்களின் தாயகத்தில் தனது இராணுவத்தின் பெரும்பகுதியை நிலைநிறுத்தியுள்ளது.
கலிபோர்னியாவை தளமாகக் கொண்ட ஓக்லாண்ட் நிறுவனத்தின் அறிக்கையின்படி, பாரம்பரிய தமிழர் நிலத்தில் இராணுவ ஆக்கிரமிப்பு தீவிரமானது, வடமாகாணத்தில் ஒவ்வொரு ஆறு பொதுமக்களும் ஒரு இராணுவ உறுப்பினர் உள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் இரண்டு பொதுமக்களுக்கு ஒரு இராணுவ உறுப்பினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்.
சிங்கள குடியேற்றங்கள்
இதைத் தொடர்ந்து சிங்கள குடியேற்றங்கள், வெற்றிச் சின்னங்கள், தொல்லியல் இட ஒதுக்கீடுகள், வனவிலங்கு சரணாலயங்கள், வனப் பாதுகாப்பு பகுதிகள், சிறப்பு பொருளாதார வலயங்கள் என இவை அனைத்தும் உள்ளூர் தமிழ் மக்களின் நிலத்தைப் பறித்து அவர்களின் கலாசார அடையாளத்தை துடைத்தழிக்கும் வகையில் மேற்கொள்ளப்படுகின்றன.
தமிழ் மக்களுக்கு எதிராக இனப்படுகொலை நடத்தப்பட்டதாக பேர்லின் மக்கள் தீர்ப்பாயம் கூறியுள்ளது. எனினும் இதுவரை எவரும் நீதியின் முன் நிறுத்தப்படவில்லை என ருத்திரகுமாரன் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
2006 ஆகஸ்ட் 4ஆம் திகதியன்று திருகோணமலை மாவட்டத்தில் உள்ள மூதூரில் எக்ஷன் பெய்ம் என்ற பிரான்ஸ் உதவி நிறுவனத்தைச் சேர்ந்த 17 இலங்கை பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
சர்வதேச குற்றங்களுக்கு பொறுப்புக்கூறல்
பதினைந்து வருடங்களாகியும் மூதூர் உதவிப் பணியாளர்களின் படுகொலைக்கு நீதி கிடைக்கவில்லை.
எனவே இராணுவச் செலவினங்களைக் குறைப்பதற்கும், சர்வதேச குற்றங்களுக்கு பொறுப்புக்கூறுவதற்கும் இலங்கைக்கான கடன் மற்றும் உதவிகளை மறுசீரமைப்பதற்கும், இலங்கையில் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் பங்களிப்பதற்கும் இதுவே சரியான தருணம் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதானி ருத்திரகுமாரன் பெரீஸ் கிளப்பின் உதவி பொதுச்செயலாளருக்கான கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |




