புகையிரத சாரதி பதவி வெற்றிடங்களுக்கு பெருமளவில் விண்ணப்பித்த சவூதி பெண்கள்
30 புகையிரத சாரதி பதவி வெற்றிடங்களுக்கு சுமார் 28000 சவூதி அரேபிய பெண்கள் விண்ணப்பம் செய்துள்ளனர்.
இந்த விண்ணப்பதாரிகளில் தெரிவு செய்யப்படும் 30 பேருக்கு ஓராண்டு கால பயிற்சி வழங்கப்பட உள்ளதாகவும், பின்னர் புனித நகரங்களான மக்கா மதீனாவிற்கு இடையில் புகையிரத சேவை இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
கடுமையான இஸ்லாமிய சட்டங்கள் அமுல்படுத்தப்பட்டு வரும் சவூதி அரேபியாவில் முதல் தடவையாக பெண் புகையிரத சாரதி பதவிக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
பல தசாப்தங்களாக சவூதி அரேபியாவில் மிகவும் குறைந்தளவான பெண் ஊழியப்படை காணப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
எனினும் அண்மைய ஆண்டுகளில் நாட்டின் ஊழியப்படையில் கூடுதல் எண்ணிக்கையில் பெண்களுக்கு சந்தர்ப்பம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.
சவூதியில் மிக நீண்ட காலமாக பெண்கள் வாகனங்களை செலுத்த தடை விதிக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. கடந்த ஐந்து ஆண்டு காலப் பகுதியில் மொத்த ஊழியப்படையில் 33 வீதமானவர்கள் பெண்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
சவூதியில் பல்வேறு முற்போக்கான தீர்மானங்கள் எடுக்கப்பட்டு வந்தாலும் இன்னமும் ஆண் பாதுகாவலரின் அனுமதியுடன் பெண்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற நடைமுறை காணப்படுகின்றது.