இலங்கையில் கோவிட்டுக்கு மருந்து கண்டுபிடித்து பரபரப்பை ஏற்படுத்தியவரின் வீட்டில் நடந்த சோகம்
கோவிட் நோயை கட்டுப்படுத்த உள்ளூர் மருந்துகளை பயன்படுத்தி பாணி, தயாரித்த வைத்தியர் உதுமாகம தம்மிக்க பண்டாரவின் இளைய சகோதரர் கோவிட் வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக கேகாலை பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் கேகாலை ஹெட்டிமுல்ல கனேகொட பகுதியைச் சேர்ந்த தம்மிக்க பண்டாரவின் இளைய சகோதரர் ஹீன் பண்டா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
உயிரிழக்கும் போது அவருக்கு 58 வயது எனவும் அவர் மூன்று பிள்ளைகளின் தந்தை எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வீட்டில் சிகிச்சை பெற்று வந்த அவர் உயிரிழந்தார். கடந்த 12ஆம் திகதி உயிரிழந்த அவரின் சடலம் கேகாலை மஹர வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இந்த நிலையில் என்டிஜென் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரது இறுதிக் கிரியைகள் நேற்று கேகாலை மயானத்தில் கோவிட் சுகாதார விதிகளுக்கு அமைவாக இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
தம்மிக்க பண்டார தயாரித்த கோவிட் பாணி சிங்கள மக்கள் மத்தியில் பிரபல்யம் அடைந்ததுடன், அப்போதைய சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னிஆராச்சியும் அதனை பருகி உறுதிப்படுத்தியிருந்தார்.
இந்தப் பாணி நாடாளுமன்றத்திற்கும் கொண்டு செல்லப்பட்ட நிலையில், சபாநாயகர் உட்பட பலர் அதனை பருகியிருந்தனர். எனினும் கோவிட்டுக்கு எதிரான மருந்தாக அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என சுகாதார அதிகாரிகளினால் அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Super Singer: Duet Round சுற்றில் நடுவர்களை வியக்க வைத்த போட்டியாளர்கள்- இறுதி நடந்த குழப்பம் Manithan
