பிரித்தானிய பிரஜைகளுக்கு விடுக்கப்பட்டுள்ள கடுமையான போக்குவரத்து எச்சரிக்கை
இலங்கைக்கு செல்லும் பிரித்தானிய பிரஜைகளுக்கான போக்குவரத்து எச்சரிக்கைகளை பிரித்தானிய அரசாங்கம் புதுப்பித்துள்ளது.
இலங்கைக்கு செல்பவர்கள் மிகவும் அவதானமாக இருப்பதுடன், தற்போதைய சூழ்நிலைக்கேற்ப செயற்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியை அனுபவித்து வருவதால், மருந்துகள், சமையல் எரிவாயு, எரிபொருள் மற்றும் உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என பிரித்தானிய அரசாங்கம் தமது நாட்டு பிரஜைகளுக்கு சுட்டிக்காட்டியுள்ளது.
எரிபொருள் பற்றாக்குறை, போக்குவரத்து, வணிகங்கள் மற்றும் அவசர சேவைகளை பாதிப்பதாகவும் அரசாங்கத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தீவிரவாத தாக்குதலை நடத்த முயற்சி
வைத்தியசாலைகள் மற்றும் நோயாளர் காவு வண்டிகள் போன்ற பிற மருத்துவ சேவைகள் பற்றாக்குறையால் பாதிக்கப்படலாம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் மின்வெட்டு தொடர்பாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. போராட்டக்காரர்களை கலைக்க கண்ணீர் புகை மற்றும் தண்ணீர் பீரங்கி பயன்படுத்தப்பட்டமை எதிர்ப்புகள், ஆர்ப்பாட்டங்கள், வீதிமறியல் மற்றும் அமைதியின்மை திடீரென ஏற்படலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதனால் அங்கு செல்லும் பிரித்தானிய பிரஜைகள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதுடன், கூட்டம் கூடுவதை தவிர்ப்பதுடன், தமது பயண ஆலோசனை மற்றும் உள்ளூர் ஊடகங்களின் மூலம் தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் வெளிநாட்டவர்கள் பார்வையிடும் இடங்களை குறிவைத்து தீவிரவாத தாக்குதலை நடத்த முயற்சி செய்ய வாய்ப்புள்ளது எனவும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை சுட்டிக்காட்டி பிரித்தானிய அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.