நுவரெலியாவில் இரும்புப் பாலம் அறுந்து போக்குவரத்து துண்டிப்பு- அவதியுறும் மக்கள்!
கடந்த ஆண்டு ஏற்பட்ட கடும் காலநிலை பாதிப்பினால், நுவரெலியா மாவட்டத்தின் லிந்துலை - மெராயா பகுதியிலிருந்து ஹென்போல்ட் தோட்டத்திற்குச் செல்லும் பாதையில் அமைந்துள்ள ஆக்ரா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக அங்கு இருந்த இரும்புப் பாலம் முறிந்து ஆற்றில் விழுந்து, போக்குவரத்து முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், அந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் உயிர் ஆபத்தை பொருட்படுத்தாமல் ஆற்றை கடந்து செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
அதிலும் குறிப்பாக, லிந்துலை ஹென்போல்ட் தோட்டத்திற்கு கீழ் இயங்கும் மிளகுசேனை, ஊட்டுவெளி மற்றும் சென்டறர்கிளாஸ் போன்ற பகுதிகளில் வாழும் 800-இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஆபத்தான முறையில் ஆற்றை கடந்த சென்று வருகின்றனர்.
ஆற்றை கடக்க முடியாமல் தவிக்கும் மக்கள்
மேலும், சிறிய மழை பெய்து ஆற்றில் நீர் அதிகரிக்கும் சந்தர்ப்பங்களில் வசிக்கும் மக்கள் அந்த ஆற்று வழியாகச் செல்ல முடியாமல் 5 கி.மீ. தூரம் சுற்றிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து எதிர்வரும் நாட்களில் அதிக மழை பெய்து ஆற்றில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டால் கூட கிராம மக்கள் கிராமத்தை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
லிந்துலை, மெராயா தமிழ் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 450 இற்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் ஆற்றில் மறுபக்கம் கரையில் தமது பாதணிகளைக் கழற்றி கையிலெடுத்துக் கொண்டு, ஆற்று நீரைக் கடந்து வந்து மீண்டும் வீதியோரங்களில் சுத்தமான நீரில் கால்களை கழுவி மீண்டும் பாதணிகளை அணிந்து கொண்டு செல்வதைக் காண முடிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போன்று, ஆசிரியர்களும் , அரசு மற்றும் தனியார் அலுவலக உத்தியோகத்தர்களும் அவ்வாறே சென்று வருகின்றனர். இதில், பாடசாலை செல்லும் சிறிய மாணவர்களை பெற்றோர் தோளில் தூக்கி சுமந்து கொண்டு, ஆற்றின் நடுவே கடந்து பாடசாலைக்கு அனுப்பி வைக்கின்ற அவல நிலை ஏற்பட்டுள்ளது.
அவதியுறும் மக்கள்
இது தொடர்பாக கிராம மக்கள் கூறியதாவது, விவசாயத்தை வாழ்வாதார மாகக் கொண்டு நாங்கள் வாழ்ந்து வருகிறோம் உணவுக்காக அத்தியாவசிய பொருட்களை வாங்க வேண்டும் என்றால் நுவரெலியா பிரதான நகருக்கோ அல்லது மெராயா நகருக்கோ செல்ல வேண்டும்.
தற்போது வெள்ளத்தில் அடித்து சென்ற பாலத்தினை இன்று வரை செய்து கொடுக்காமல் இருப்பதால் ஆற்றில் இறங்கி பல்வேறு சிரமங்களுக்கு இடையில் சென்று வருகிறோம்.

அத்தியாவசிய பொருட்கள் மற்றும் விவசாய பொருட்களை வாங்கிய பின்னர் தலைச்சுமையாக ஆற்றைக் கடந்து ஊருக்கு வருவதில் சிரமம் ஏற்படுகிறது.
பல நேரங்களில் முதியவர்கள், பெண்கள் ,சிறுவர்கள் சில பொருட்களை ஆற்றில் தவறவிடுவதும் உண்டு. ஆற்றில் தண்ணீர் அதிகம் வரும்போது சுற்று வீதி வழியாக 5 கிமீ தூரம் சுற்றி முச்சக்கரவண்டி அல்லது இருசக்கர வாகனங்களில் சென்று பொருட்களை வாங்கும் நிலையுள்ளது.
எனவே, உடனடியாக பாதுகாக்க சென்று வர தற்காலிகமாக ஆற்றின் குறுக்கே பாலம் கட்டித்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்த்துள்ளனர். இதனால் பலரும் பயன்பெறுவார்கள் எனவும் இதற்கு பொறுப்பான அதிகாரிகள் கோரிக்கை நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளதால், அப்பகுதி மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

