உள்ளூரில் கிடைக்கும் பாரம்பரிய உணவு வகைகள் ஆரோக்கியமானவை: மாவட்ட மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர்
உள்ளூரில் கிடைக்கக் கூடிய போஷாக்கு நிறைந்த பாரம்பரிய உணவு வகைகள்தான் ஆரோக்கியமானவை, அத்தகைய உணவு உற்பத்திகளை அனைவரும் ஊக்கவிக்க வேண்டும் என மாவட்ட மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் அருணாளினி சந்திரசேகரம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம் நிறுவனத்தினால் ஊக்கமளிக்கப்படும் சஞ்சீவி போஷாக்கு உணவு உற்பத்திகளை மக்களுக்கிடையே அறிமுகப்படுத்தும் நிகழ்வு ஏறாவூர்பற்றுப் பிரதேச செயலகப் பிரிவின் செங்கலடி நகரத்தில் இடம்பெற்றபோது அவர் இந்த வேண்டுகோளை முன்வைத்தார்.
உள்ளூர் பாரம்பரிய போஷாக்கு உணவுப் பொருட்கள்
விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம் நிறுவனத்தின் மாவட்ட நிர்வாக அலுவலர் கே.நிர்மலா, தலைமையில் செங்கலடி சௌபாக்கியா மண்டபத்தில் நிகழ்வுகள் இடம்பெற்றன.
நிகழ்வில் பெண் தொழில் முயற்சியாளர்களால் உற்பத்தி செய்யப்பட்ட உள்ளூர் பாரம்பரிய போஷாக்கு உணவுப் பொருட்கள் விற்பனையும் இடம்பெற்றது.
நிகழ்வைத் துவக்கி வைத்து தொடர்ந்து உரையாற்றிய மாவட்ட மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் அருணாளினி, நலிவுற்ற குடும்பங்களை முதன்மைத் தெரிவாகக் கொண்டு அவர்களது வாழ்வாதாரத்தையும் வாழ்வையும் செழிமையாக்கும் நோக்கில் விழுது நிறுவனம் செயற்பட்டு வருகின்றது.
மக்களின் நலன் சார் திட்டங்கள்
அமரர் சாந்தி சஞ்சிதானத்தின் இந்தக் கனவு காலங்கள் கடந்தும் உயிர்ப்புடன் உள்ளதையிட்டு மகிழ்ச்சியடைகிறோம். அவர் ஆரம்பித்து வைத்த நலிவுற்ற மக்களின் நலன் சார்ந்த திட்டங்களால் இன்றுவரை நன்மையடைந்து கொண்டிருப்போர் ஏராளம்.
நலிவுற்ற பெண்களிலிருந்து பெண் தொழில் முயற்றியாளர்கள் சஞ்சீவி இயற்கை போஷாக்கு உணவு உற்பத்திகளை மேற்கொண்டு ஆரோக்கியத்திற்கு வழிகோலுவதுடன் வருமானத்தையும் ஈட்டிக் கொள்ள முடியும். உள்ளூரில் கிடைக்கக் கூடிய போஷாக்கு நிறைந்த பாரம்பரிய உணவு வகைகள்தான் ஆரோக்கியமானவை.
அவற்றை மீண்டும் ஊக்குவிக்க வேண்டும். சிறந்த ஆரோக்கியத்திற்கு சிறந்த உணவு முக்கியம். இதன் மூலம் எதிர்கால சந்ததியும் ஆரோக்கியமுள்ளதாக உருவாக்க முடியும். உள்ளுரில் இலாபமாகக் கிடைக்கக் கூடிய அத்தகைய உணவு உற்பத்திச் செயற்பாடுகளை அனைவரும் ஊக்குவிக்க வேண்டும் என்றார்.














