2027 வரவு செலவுத் திட்டம்.. நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்தத்தில் குதிக்கும் அதிகாரிகள்
அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பல தொழிற்சங்கங்கள் நாடளாவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடத் தீர்மானித்துள்ளன.
இதற்கமைய, கடந்த நவம்பர் 13ஆம் திகதி அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட அரச சேவைப் பொறியியலாளர்கள் சங்கம் (APSE), நாளை (16) முதல் நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளது.
அதேவேளை, தங்களுக்கு எவ்வித நிவாரணங்களும் வழங்கப்படாததற்கு எதிர்ப்புத் தெரிவித்து, நீர்ப்பாசனத் தொழில்நுட்ப உதவியாளர்கள் சங்கம் இன்று (15) முதல் எதிர்வரும் 17ஆம் திகதி வரை கடமைகளிலிருந்து விலகி சுகவீன விடுமுறைப் போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது.
எதிர்ப்பு நடவடிக்கை
மேலும், தங்களது கோரிக்கைகளுக்குத் தீர்வு வழங்கப்படும் வரை நாளை (16) முதல் நாடளாவிய வேலைநிறுத்தத்தை முன்னெடுக்கவுள்ளதாக அகில இலங்கை அனர்த்த நிவாரண சேவைகள் அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் உபுல் குமார அறிவித்துள்ளார்.

இதேவேளை, வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்வரும் 17ஆம் திகதி சுகவீன விடுமுறைப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அரச கால்நடை வைத்தியர்கள் சங்கத்தின் (SVSA) தலைவர் வைத்தியர் உபுல் ரஞ்சித் குமார கொழும்பில் இன்று (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
இதேநேரம், வரவு செலவுத் திட்டத்தில் நிறைவேற்று அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள கொடுப்பனவுகள் ஏனைய அரச அதிகாரிகளுக்கும் வழங்கப்பட வேண்டும் எனவும், கோரிக்கைகளுக்குப் பதில் கிடைக்காவிட்டால் கடும் தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இலங்கை அரச அதிகாரி தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைவர் சுமித் கொடிகார எச்சரித்துள்ளார்.
அத்துடன், இம்முறை வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக தனியார் பேருந்துத் துறைக்கு எவ்வித நிவாரணமும் வழங்கப்படவில்லை என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் (LPBOA) தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.