முத்துராஜவல பூங்காவில் சுற்றுலா மண்டலம் அமைக்கப்படுவதாக கூறப்படும் நடவடிக்கை தொடர்பில் அதிருப்தி
முத்துராஜவல பூங்காவில் சுற்றுலா மண்டலம் அமைக்கப்படுவதாகக் கூறப்படும் நடவடிக்கை குறித்து கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை மற்றும் புனித பஹியங்கலா ஆனந்த தேரர் ஆகியோர் இன்று தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.
செய்தியாளர் சந்திப்பு ஒன்றின் போது இந்த எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பாதுகாக்கப்பட்ட நிலத்தில் அமைந்துள்ள பூங்காவை தனியார் நிறுவனம் ஒன்று மோசடியாக கையகப்படுத்தியதாகவும், அந்த நிலத்தை ஒரு தனியார் நிலம் என்று கூறி அடையாள பலகைகளை அமைத்ததாகவும் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை குற்றம் சுமத்தியுள்ளார்.
திடக்கழிவுகளை அகற்றும் போர்வையில் தற்போது அங்குள்ள நிலம் நிரப்பப்பட்டு வருகிறது. கொழும்பு நகரசபையிலிருந்து திடக்கழிவுகளும் இந்த நிலத்தில் கொட்டப்படுகின்றன என்று தேரர் குறிப்பிட்டார்.
முத்துராஜவல ஈர நிலங்களில் 78 வகையான மீன்கள், 14 வகையான ஊர்வன மற்றும் 83 பறவை இனங்கள் வாழ்கின்றன.ஈரமான நிலம் உண்மையில் மீன்களுக்கான இனப்பெருக்கத்துக்கு உகந்த நிலம் ஆகும்.
இது நீர்கொழும்பு வாவியுடன் இணைகிறது.இந்த நிலையில் மீன்பிடிக்கச் செல்பவர்களும் வாழ்வாதாரத்தை இழக்க நேரிடும் என்று ரஞ்சித் ஆண்டகை ,தேரரும் குறிப்பிட்டனர்.
ஈரநிலத்தை நிரப்புவது உண்மையில் 1991 ல் ஆரம்பிக்கப்பட்டது.எனினும் மதகுருமார்கள் உட்பட அந்த பகுதியில் உள்ள மக்கள் அதனை எதிர்த்தமையால் அந்த திட்டம் கைவிடப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.