முல்லைத்தீவு கமநல சேவைகள் திணைக்களத்தின் பாராமுகம்
முல்லைத்தீவு குமுழமுனைக்கு அண்மையில் உள்ள தாமரைக்கேணி குளமும் அதனையண்டிய வயல் நிலங்களும் வினைத்திறனான பயன்பாட்டுக்காக இன்னமும் அதிகமாக முயற்சிக்கப்பட வேண்டிய சூழலில் இருப்பதனை அவதானிக்கலாம்.
25 ஏக்கர் வயல் நிலத்திற்கான நீர்ப்பாசனத்தினை வழங்கும் வகையில் தாமரைக்கேணி குளம் அமைந்துள்ளது.
வினைத்திறனான முயற்சிப்புக்களுக் கூடாக குறைந்த நிலத்தில் அதிக விளைச்சலைப் பெற விசேட விவசாயத் தொகுதியாக பேணக்கூடிய இடம் கவனிப்பாரற்றுக் கிடப்பது தொடர்பில் தங்கள் அதிருப்தியை ஆர்வலர்கள் தெரிவிப்பதும் நோக்கத்தக்கது.
நெற் செய்கைக் கோலம்
மாரி காலத்தில் பெரும்போக நெற் செய்கையானது மழை நீரைக் கொண்டு செய்யப்படுகின்றது.
சிறு போகத்தில் ஊற்று நீரைக் கொண்டும் கோடையில் குளத்து நீரைக் கொண்டும் நெற்செய்கையினை செய்து கொள்ள முடியும் என தாமரைக்கேணி வயல் விவசாயி விளக்கியிருந்தார்.
மாரிமழையினை அடுத்துள்ள ஐந்து மாதங்களுக்கு தொடர்ந்து நீர் ஊறி ஓடிக்கொண்டிருக்கும். தாமரைக்கேணி குளத்திற்கு கீழுள்ள வயல் நிலங்களிலும் நீர்ப்பிடிப்பு தொடர்ந்து இருப்பதையும் அவதானிக்கலாம்.
இயற்கையாக இந்த நீரூற்று இருப்பதாகவும் அப்பகுதியில் வாழ்ந்து வரும் வயோதிபர் குறிப்பிடுகின்றார்.
நிலங்கள் சரிவர சீராக்கப்பட்டால் 25 ஏக்கரிலும் கூடிய நிலத்தில் நெற்செய்கையினை மேற்கொள்ள முடியும் என அந்த வயோதிபர் மேலும் குறிப்பிட்டார்.
வெண் மணலாக இருக்கும் தரையில் குறைந்தளவு களித்தன்மை இருப்பதையும் அவதானிக்கலாம் முடிகின்றது.
வயல் அழிவுக்கு இழப்பீடு கிடைக்குமா?
பெரும் போகத்தில் தாமரைக்கேணி வயல்களில் மேற்கொள்ளப்பட்ட நெற் செய்கை நோயினால் பாதிக்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து கிடைத்த மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தினாலும் பெருமளவில் அழிவைத் சந்தித்திருந்து.
பத்து ஏக்கர் அளவில் வயல் நிலங்கள் அறுவடை செய்ய முடியாத சூழலில் கைவிடப்பட்டதாக இம்முறை விதைப்பில் ஈடுபட்டிருக்கும் விவசாயி ஒருவரோடு உரையாடும் போது குறிப்பிட்டார்.
கைவிடப்பட்ட வயல் நிலங்களில் இம்முறை இடைப்போக விதைப்பில் ஈடுபடவில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
பயிர் அழிவுக்கான தரவுகளை குறிப்பிட்டு விண்ணப்பித்த போது கொழும்பில் இருந்து பயிரழிவு பார்க்க வருவதாக குறிப்பிட்டிருந்தது போதும் பயிரழிவு பார்க்க வந்தவர்கள் தாமரைக்கேணி வயல் நிலங்களை வந்து பார்வையிடவில்லை.
மாறாக குமுழமுனை கமநல சேவைகள் திணைக்களத்தினைச் சேர்ந்த அதிகாரிகளே வந்து பார்த்துச் சென்றுள்ளார்கள்.அதனால் பயிரழிவுக்கான இழப்பீடு தங்களுக்கு கிடைக்கும் எனத் தெரியவில்லை என விவசாயிகளிடம் சந்தேகம் இருப்பதனை அவதானிக்க முடிகின்றது.
விவசாயிகளுக்கு பயிரழிவு தொடர்பிலான தெளிவு இல்லை என்பதோடு அது தொடர்பில் உரிய அதிகாரிகளால் அவர்கள் தெளிவுபடுத்தப்படவில்லை என்பதையும் அவதானிக்க முடிகின்றது.
ஊறிவரும் நீர் வீணாகிறது
மாரியில் பெய்த மழையினால் தண்ணி குடித்த மண் வெய்யில் காலத்தில் ஊறி சிற்றாறு போல ஓடிக்கொண்டிருக்கும்.
இவ்வாறான நீர் ஊறி ஓடும் இடங்கள் முல்லைத்தீவு மாவட்டத்தின் கிழக்குப் பகுதியில் பரவலாக எல்லா இடங்களிலும் இருப்பதனை அவதானிக்கலாம் என முல்லைத்தீவில் பல இடங்களுக்கு சென்று வியாபாரத்தில் ஈடுபட்டுவரும் வியாபரி ஒருவர் குறிப்பிடுவதும் நோக்கத்தக்கது.
கொட்டுக் கிணற்று பிள்ளையார் ஆலயக் கேணி,ஊற்றங்கரை சித்திவிநாயகர் கேணி போன்றன இத்தகைய ஊற்று நீரின் மூலம் நீரோட்டத்தினை வழங்கிவரும் இடங்களாக இருக்கின்றன.
முல்லைத்தீவில் குடிநீர் வழங்கலுக்கான நீர் ஊற்றங்கரை நீரூற்றில் நந்திக்கடல் பக்கமாக அமைக்கப்பட்டுள்ள துளைக்கிணறுகள் மூலம் பெறப்படுவதும் குறிப்பிடத்தக்கது.
கணுக்கேணி கற்பகப்பிள்ளையார் கோவிலுக்கு பின்னுக்குள்ள குழாய்க்கிணறும் ஊற்று நீரைக் கொண்டுள்ளது.நீர் விநியோகத்திற்கென இராணுவத்தினர் நீண்ட காலமாக அந்தக் கிணற்றினை பயன்படுத்தி வந்திருந்தனர்.
நிலம் ஊறி ஓடும் நிலமாகவே தாமரைக்கேணி குளத்தினைச் சூழவுள்ள நிலங்கள் இருப்பதனை அவதானிக்கலாம்.
இந்த நிலங்களில் ஊறி வரும் நீரினை வினைத்திறனாக பயன்படுத்திக்கொண்டு அதிகளவில் பயனடைய முடியும்.எனினும் உச்சளவு பயன்பாட்டுக்காக திட்டமிட்டு செயற்படும் முறைமையினை இப்பகுதியில் காணமுடியவில்லை என பெரு விவசாயத்தில் ஈடுபட்டு வரும் குமுழமுனையைச் சேர்ந்த விவசாயி ஒருவர் சுட்டிக்காட்டுவதும் கவனிக்கத்தக்க விடயமாகும்.
ஊற்றங்கரை கேணி மற்றும் கொட்டுக் கிணற்று பிள்ளையார் கேணியிக்கு கீழ் உள்ள வயல் நிலங்களில் மேற்கொள்ளப்படும் நெற்செய்கை போல் இங்கே திட்டமிடப்படவில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும்.
திருத்தப்பட்ட தாமரைக்கேணி குளம்
2023 ஆம் ஆண்டில் கிடைத்திருந்த அபிவிருத்திக்கான நிதியுதவிகள் மூலம் தாமரைக் கேணி குளம் திருத்தப்பட்டுள்ளது. புனரமைக்கப்பட்ட தாமரைக்கேணி குளம் 2023 ஆம் ஆண்டின் கார்த்திகை மாதத்தில் விவசாயிகளின் பயன்பாட்டுக்காக கையளிக்கப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
1.4 மில்வியனுக்கும் சற்றுக்கூடிய இலங்கை ரூபாய்களை முதலீட்டுக்காக பயன்படுத்தியிருப்பதாக காட்சிப்படுத்தப்பட்ட தகவல்கள் மூலம் அறிய முடிகிறது. குளப்புனரமைப்போடு தாமரைக்கேணிக்கான பாதைகளும் புனரமைக்கப்பட்டு இருந்ததாகவும் எனினும் பாதை இப்போது பெருமளவில் சேதமடைந்துள்ளதாகவும் விவசாயிகள் குறிப்பிட்டதனை அவதானிக்கவும் முடிந்தது.
அழிவடைந்துள்ள பாதைகள்
தாமரைக்கேணிக்கு மூன்று வழித்தடங்கள் ஊடாக பயணிக்கலாம். அவ் எல்லாப் பாதைகளும் இயல்பான பயணத்திற்கென பயன்படுத்த முடியாத சூழலில் இருப்பதையும் அவதானிக்கலாம்.
குளத்திற்கு கீழாக இருக்கும் பாதையில் சிவப்புக் கிரவல் இடப்பட்டு பாதையமைக்கப்பட்டிருந்தது.இப்போது சிறு கற்களை மட்டும் அதிகம் கொண்ட பாதையாக அது இருக்கின்றது.
மற்றைய பாதை வெள்ள நீரால் அரிக்கப்பட்டதோடு பாதையின் குறுக்காக இருந்த பாலம் சிதைந்து போயுள்ளது.
போக்குவரத்துக்கு பொருத்தமற்ற தன்மையில் அந்த பாதை இருக்கின்றது.
முன்றாவது பாதையின் நீர்க்கசிவு இருப்பதும் இடையிடையே பாதை கிடங்குகளாக இருப்பதையும் அவதானிக்கலாம். வயலில் உழவுக்காக உழவு இயந்திரத்தை கொண்டு செல்வதற்கேற்ற பொருத்தமான பாதையமைப்பு முறைகள் இல்லை என்பதோடு இம்முறை விதைப்புக்காக உழவியந்திரத்தைக் கொண்டு செல்லும் போது புதையுண்ட நிகழ்வையும் அவதானிக்க முடிந்தது.
கவனமெடுக்குமா கமநல சேவைகள் திணைக்களம்
தாமரைக்குள வயல் நிலத்தொகுதி தொடர்பில் வினைத்திறனான விளைவுகளைப் பெற்றுக்கொள்வதில் கமநல சேவையின் முனைப்பான செயற்பாடுகள் நடைமுறைப்படுத்தல் வேண்டும்.
வீணாகும் ஊற்று நீரை பயன்படுத்திக்கொள்ளும் செயற்றிட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.
நெற்செய்கையோடு சிறுதானிய பயிர்ச்செய்கைகளை முன்னெடுப்பது தொடர்பில் முயற்சிப்புக்களை மேற்கொள்ள வேண்டும்.
தாமரைக்குளமும் அதனைச் சூழவுள்ள நிலமும் வினைத்திறனான விளைவுகளைப் பெற்றுக்கொள்வதற்காக சிறந்த முகமைக்குட்டபடுத்தி விசேட விவசாய நிலத்தொகுதியாக முன்மொழியப்பட்டு விவசாயச் செய்கைக்குட்படுத்தினால் சிறிய நிலத்தில் அதிக விளைச்சலைப் பெற்றுக்கொள்ள முடியும்.
கமநல சேவைகள் திணைக்களம் பொருத்தமான முயற்சிப்புக்களை மேற்கொற்ளுமா என்பது சந்தேகமே.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |