எகிப்திய சிறைகளில் சித்திரவதை : சூடான் அகதிகள் எதிர்கொள்ளும் கொடூரம்!
சூடானில் இடம்பெற்று வரும் உள்நாட்டுப் போரிலிருந்து தப்பித்து, எகிப்தில் தஞ்சமடைந்த சூடான் அகதிகள் அங்குள்ள சிறைகளில் கடுமையான சித்திரவதைகளையும், மிரட்டிப் பணம் பறிப்பு மற்றும் பலவந்தமாக நாடு கடத்தப்படும் அபாயங்களையும் எதிர்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்து சர்வதேச செய்தி நிறுவனமான ரொய்ட்டர்ஸ் வெளியிட்டுள்ள விரிவான புலனாய்வு அறிக்கை, எகிப்திய சிறைச்சாலைகளின் கொடூர முகத்தை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளது.
சுரேஷ் சலேவின் மடிக்கணினியின் இரகசிய உளவுத்தகவல்கள் விற்பனை செய்யப்படலாம்..! சாகர காரியவசம் எச்சரிக்கை
சூடான் அகதிகள்
எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் உள்ள மிகக் குறுகிய, நெரிசல்மிக்க சிறை அறைகளில் அடைக்கப்பட்ட சூடான் அகதிகள் பலர் அங்குள்ள குற்றவாளிகளாலும் பாதுகாப்புப் பிரிவினராலும் கொடூரமாகத் தாக்கப்படுவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு மட்டும் எகிப்திய சிறைகளில் மூன்று சூடான் அகதிகள் உயிரிழந்துள்ளதை ரொய்ட்டர்ஸ் ஆவணப்படுத்தியுள்ளது.

இதில் அல்-நசீர் அல்-சாதிக் என்ற 18 வயது பாடசாலை மாணவன், போதிய மருத்துவ வசதியின்றி நிமோனியா காய்ச்சலால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிறைகளில் கைதிகளுக்குப் போதிய இடவசதி இல்லாததால் அவர்கள் தூங்கும் நிலையும், அசுத்தமான குடிநீர் மற்றும் உணவுப் பற்றாக்குறையும் நிலவுவதாக விடுதலையான முன்னாள் கைதிகள் விவரித்துள்ளனர்.
கடந்த 2023ஆம் ஆண்டு சூடானில் போர் வெடித்தபோது எகிப்து ஒரு மில்லியனுக்கும் அதிகமான அகதிகளை ஏற்றுக்கொண்ட போதிலும், தற்போது அந்து நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் புலம்பெயர்ந்தோருக்கு எதிரான அரசியல் சூழல் காரணமாக அகதிகள் மீதான பிடி இறுக்கப்பட்டுள்ளது.
எகிப்தில் புதிய அகதிகள் சட்டம்
கடந்த நவம்பர் மாதத்திலிருந்து மட்டும் சுமார் 5,500க்கும் மேற்பட்ட சூடான் அகதிகள் எகிப்திய அதிகாரிகளால் பலவந்தமாகத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் மிகக் கடுமையான உயர்வாகும்.
வீடுகள் மற்றும் பணியிடங்களில் சாதாரண உடையில் வரும் பாதுகாப்புப் பிரிவினர், ஐநாவிடம் அகதி அந்தஸ்து பெற்றவர்களைக் கூட வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று எல்லையோர நகரங்களுக்கு நாடு கடத்துவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தற்போதைய ஆபத்தான சூழ்நிலையில் சூடானுக்கு அகதிகளைத் திருப்பி அனுப்பக் கூடாது என ஐநா அகதிகள் முகமை எச்சரித்துள்ளது.
எகிப்தில் பல தசாப்தங்களாக அகதிகளுக்குக் கிடைத்து வந்த பாதுகாப்பு தற்போது முற்றிலும் சீர்குலைந்துவிட்டதாக எகிப்திய தனிநபர் உரிமைகளுக்கான முன்முயற்சி அமைப்பின் கரீம் என்னாரா தெரிவித்துள்ளார்.
மேலும், எகிப்து கொண்டு வந்த புதிய அகதிகள் சட்டம், அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரங்களை வழங்கி அகதிகளை வலுக்கட்டாயமாக வெளியேற்றுவதை சட்டப்பூர்வமாக்க வழிவகுப்பதாக மனித உரிமை ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
திட்டமிட்ட அடக்குமுறைகள்
இருப்பினும், அகதிகளுக்கு எதிராக எகிப்தில் எந்தவித திட்டமிட்ட அடக்குமுறைகளும் முன்னெடுக்கப்படவில்லை என எகிப்திய அரசாங்க தகவல் சேவை மையம் மறுத்துள்ளது.
சட்டவிரோதமாக நுழைபவர்கள் அல்லது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்குபவர்கள் மட்டுமே முறையான சட்ட விதிகளுக்கு அமைய நாடு கடத்தப்படுவதாக அரசு தரப்பு விளக்கியுள்ளது.

அத்துடன் மில்லியன் கணக்கான சூடான் மக்கள் எகிப்தில் தங்கி வாழ்வதாகவும், கல்வி மற்றும் சுகாதார வசதிகளைத் தங்குதடையின்றிப் பெற்று வருவதாகவும் எகிப்து அரசு மேலும் குறிப்பிட்டுள்ளது.
எனினும், சிறைக்கொடுமைகளுக்குப் பயந்து பல அகதிகள் தங்களின் குடும்பங்கள் பிரிக்கப்படுவதைத் தவிர்க்க, மீண்டும் போர் வலயமான சூடானுக்கே உயிரைப் பணயம் வைத்துத் திரும்பத் தொடங்கியுள்ளனர்.