தொடரும் கடும் மழை மற்றும் வெள்ளம்: ஆயிரக்கணக்கான மக்கள் பாதிப்பு
நாட்டில் கடந்த சில நாட்களாக நிலவும் மோசமான காலநிலை காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
தரவுகளின்படி நான்கு மாவட்டங்களில் 15,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் கடும் மழை மற்றும் பலத்த காற்றினால் 3,672 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
வெள்ளத்தால் மோசமான பாதிப்பு
வெள்ளத்தினால் 9,500 க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் வெள்ளத்தினால் கம்பஹா மாவட்டமே மோசமாக பாதிக்கப்பட்ட பிரதேசம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மோசமான வானிலை காரணமாக 377 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் பாதிக்கப்பட்ட 37 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், தென்மேற்கு பகுதிகளில் தற்போது நிலவும் மழை நிலைமை மேலும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழை
அதன்படி மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மேலும் மத்திய மலைநாட்டில் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் எதிர்வுகூறியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |