ஊரடங்கும் நீக்கப்பட்டது - ஸ்தம்பிக்கப் போகும் கொழும்பு! அதி உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் முக்கிய பகுதிகள் (Video)
கொழும்பு ஸ்தம்பிக்கும் நிலை
இன்றைய தினம் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் கொழும்பு ஸ்தம்பிக்கும் நிலை ஏற்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவர் தலைமையிலான அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி கொழும்பு - காலி முகத்திடலில் இளைஞர்களால் ஆரம்பிக்கப்பட்ட தன்னெழுச்சி போராட்டத்திற்கு இன்றுடன் 3 மாதங்கள் நிறைவடைகின்றமையை முன்னிட்டும், மே 9 ஆம் திகதி காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தின் மீது தாக்குல்கள் மேற்கொள்ளப்பட்டு இரு மாதங்கள் நிறைவடைந்தும் அதனுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படாமை உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
கோட்டா - ரணில் அரசாங்கத்தை பதவி விலகச் செய்வோம் என்ற தொனிப்பொருளிலேயே இன்றைய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
பலர் ஆதரவு
அத்தோடு இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஐக்கிய மக்கள் சக்தி, மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட பிரதான அரசியல் கட்சிகளும், சிவில் சமூக அமைப்புக்களும், மதத் தலைவர்களும் வெவ்வேறு பேரணிகளையும் ஆர்ப்பாட்டங்களையும் ஏற்பாடு செய்துள்ளனர்.
இவ்வாறு கொழும்பில் பரந்தளவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆர்ப்பாட்டங்களைக் கருத்திற் கொண்டு முப்படையினர் மற்றும் பொலிஸாரினால் நேற்று முதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், இன்றைய தினமும் ஜனாதிபதி மாளிகையை சூழவும் காலிமுகத்திடல் பகுதியிலும் ஆயிரக்கணக்கான பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை நேற்று இரவு முதல் கொழும்பு உள்ளிட்ட மேல் மாகாணத்தின் பல பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்கும் இன்று காலை முதல் நீக்கப்பட்டுள்ளது.
மேலதிக தகவல் - டில்சான்

3ஆம் உலக போரின் தொடக்கமா? அணுகுண்டு வீச தயாராகும் ஈரான்; கிரீன்லாந்திற்கு அடம்பிடிக்கும் டிரம்ப் News Lankasri