அவசரகால ஒழுங்குவிதிகளை நிறைவேற்றுவதற்கான பிரேரணை நாடாளுமன்றில் முன்வைப்பு
நாட்டில் அவசரகால ஒழுங்குவிதிகளை நிறைவேற்றுவதற்கான பிரேரணை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த பிரேரணையானது ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவினால் இன்றைய தினம் முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த பிரேரணை தொடர்பான விவாதம் காலை 10.30 மணியளவில் ஆரம்பமாகியுள்ளது.
அத்துடன் பிரேரணை மீதான வாக்கெடுப்பு 4.30 மணிக்கு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய உணவுப்பொருள் விநியோகம் மற்றும் பதுக்குதலை தடுப்பதற்காக ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால ஒழுங்குவிதிகளை நிறைவேற்றுவதற்கான பிரேரணையே நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
தற்போதைய கோவிட் தொற்றுநோய் மற்றும் இதர செலவுகளுக்காக செலவிடப்பட வேண்டிய 73.2 பில்லியன் ரூபா (732,124,887,226) மதிப்புள்ள துணை மதிப்பீட்டை அரசாங்கம் இன்று நாடாளுமன்றத்தில் முன்வைத்தது.
அரசாங்கத்தின் பிரதம அமைப்பாளர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இதனை சமர்ப்பித்துள்ளார்.
இந்த துணை மதிப்பீட்டின் மூலம், வடக்கு மற்றும் கிழக்கு உட்பட அனைத்து 24 மாவட்டங்களிலும் தொற்றுநோய் தொடர்பான விஷயங்களுக்காக செலவிட அரசாங்கம், நாடாளுமன்றின் ஒப்புதலை கோரியுள்ளது.
தனிமைப்படுத்தலில் உள்ளவர்களுக்கும் தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் நிவாரணம் வழங்க, கொவிட் சிகிச்சை மையங்களுக்காக அரசாங்கம் கூடுதல் நிதியை செலவிட உள்ளது மேலும் மீனவர்களுக்கு நிவாரணத்திற்காக அதிக நிதி செலவழிக்கப்படவுள்ளது.
தெற்கு நெடுஞ்சாலையை மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை வரை நீடிப்பதற்கான நிலுவைகளை தீர்க்க 8.04 பில்லியன் ரூபாவும், சூரியவெவ சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்காக 26 மில்லியன் ரூபாவும் செலவிடப்பட உள்ளது.
இதனை தவிர, அரசாங்கம், 8.8 மில்லியன் ரூபாவை, தெங்கு அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் கட்டட மேம்பாட்டுக்காக கோரியுள்ளது.