21வது திருத்தச் சட்டத்தைத் கூட்டமைப்பு ஆதரித்தது சரியானது! - ஞா.ஸ்ரீநேசன்
அரசமைப்பின் 21 ஆவது திருத்தச் சட்டத்தைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரித்தது தவறல்ல அது சரியானது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
"அரசமைப்பின் 21 ஆவது திருத்தச் சட்டம், 20 ஆவது திருத்தச் சட்டடத்தை விட நல்லது, ஓரளவேனும் வரவேற்கத்தக்கது. 21 ஆவது திருத்தத்தை எதிர்த்தால், நாம் 'மொட்டு'க் கட்சியினரின் 20 ஆவது திருத்தத்தை ஏற்றுக்கொள்வதாக அமைந்துவிடும்.
ஜனாதிபதியின் அதிகாரங்கள் ஓரளவு குறைப்பு
இதனைத் தமிழத் தேசியத்தின்பால் சிந்திக்கும் ஒவ்வொரு தமிழனும் அறிவர். 20 ஆவது திருத்தத்தில் காணப்பட்ட ஜனாதிபதியின் அதிகாரங்கள் ஓரளவாவது குறைக்கப்பட்டுள்ளன.
ஆணைக்குழுக்கள் பலவற்றின் சுயாதீனச் செயற்பாட்டை 20 ஆவது திருத்தம் பறித்து ஜனாதிபதியிடம் வழங்கியது. ஆனால் 21 ஆவது திருத்தம் ஆணைக்குழுக்கள் சுயாதீனமாக செயற்பட வழிகோலியது.
பஸில் போன்றவர்களுக்காக இரட்டைக் குடியுரிமையை 20 ஆவது திருத்தம் ஏற்றுக்கொண்டது. அதனை 21 ஆவது திருத்தம் அகற்றியது. 10 பேர் கொண்ட அரசமைப்புப் பேரவையை 20 ஆவது திருத்தம் அகற்றி ஜனாதிபதிக்கு ஏகபோக அதிகாரத்தை 20 ஆவது திருத்தம் வழங்கியது.
ஆனால் 21 ஆவது திருத்தம் மீண்டும் அரசமைப்புப் பேரவையைக் கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் ஆணைக்குழுக்கள் சுயாதீனமாக இயங்க வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
பஸில் அணியினர் நாடாளுமன்றத்தை நான்கரை ஆண்டுகளின் பின்னர்தான் ஜனாதிபதி கலைக்க அதிகாரம் அளிக்க வேண்டும் என்று அடம் பிடிதனர். மக்கள் விரும்பாத நாடாளுமன்றத்தை நீடித்து தமது செல்வாக்கை அதிகரிப்பதே பஸிலினதும், மொட்டினதும் திட்டமாகும்.
ராஜபக்சக்களின் தீவிர ஆதரவாளர்கள் எதிர்ப்பு
அந்தத் திட்டம் 21 ஆவது திருத்தத்தால் முறியடிக்கப்பட்டுள்ளது. மொட்டுக் கட்சியின் ராஜபக்சக்களின் தீவிர ஆதரவாளர்களே 21 ஆவது திருத்தத்தைக் கடுமையாக எதிர்த்தனர். ஆனால், தாம் வாக்கெடுப்பில் தோல்வியடைவோம் என்பதை அறிந்த பின்னர் வாக்கெடுப்பில் அவர்கள் கலந்துகொள்ளவில்லை.
அவர்களது நிலைப்பாட்டைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் எவரும் எடுக்க வேண்டும் என்று தமிழர்கள் எதிர்பார்க்கவில்லை. எதிர்த்து வாக்களித்த சரத் வீரசேகரவின் நிலைப்பாடு சரி என்று நமது உறுப்பினர்கள் பாராட்ட வேண்டியதும் இல்லை.
தன்முனைப்பான எதேச்சையான முடிவுகளைவிட, தமிழ்த் தேசிய மக்கள்
ஏற்றுக்கொள்ளத்தக்க பெரும்பான்மை உறுப்பினர்களின் அர்த்தமுள்ள முடிவுகளையே
தமிழர்கள் எதிர்பார்க்கின்றார்கள். இதனை அனைவரும் அறிந்தால் முரண்பாடுகளைத்
தவிர்க்க முடியும்" - என்றுள்ளது.