கூட்டமைப்புடன் முக்கிய பேச்சு! ரணில் வழங்கிய உறுதிமொழி
வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு இடையில் தற்போது காணப்படும் அதிகாரங்களை செயற்படுத்துவற்கு செய்ய வேண்டிய விடயங்கள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் வலியுறுத்தியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வு பேச்சு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இன்று மாலை (05.01.2023) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கொண்ட சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
“இந்த விடயம் தொடர்பில் பரிசீலித்து எதிர்வரும் 10 ஆம் திகதி முடிவை அறிவிப்பதாக ஜனாதிபதி உறுதியளித்ததாகவும்” நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இனப்பிரச்சினைக்கான தீர்வு
அவர் மேலும் கூறுகையில்,
"அரசியல் கைதிகள் விடயம் மற்றும் காணி விடுவிப்பு சம்பந்தமாக கடந்த சந்திப்பில் தெரிவித்த கருத்துக்களையே இன்றைய சந்திப்பிலும் திரும்பச் திரும்ப அவர்கள் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.
எதிர்வரும் 10 ஆம் திகதி நடைபெறவுள்ள சர்வகட்சி சந்திப்பின் போது உடனடியாக நடைமுறைப்படுத்தக் கூடிய விடயங்கள் பற்றி ஒரு பட்டியல் தருமாறு சொன்னார்கள். நான் அதைத் தருகின்றேன் என்று தெரிவித்தேன்.
அதேநேரத்தில் அரசியல் தீர்வு விவகாரம் உள்ளிட்ட ஏனைய விடயங்களிலும் இன்னமும்
ஒரு முன்னேற்றம் இல்லை எனில் நாம் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதா?
இல்லையா? என்பது தொடர்பில் ஒரு தீர்மானம் எடுக்க வேண்டி வரும் என்பதை
ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளோம்." என்றார்.
இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்திற்கு முன்னர் இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்திருந்த நிலையில், தமிழ்க் கட்சிகள் ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றன.
இதன்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மூன்றாவது தடவையாக இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து சந்தித்து கலந்துரையாடியுள்ளது.
இறுதி நிலைப்பாடு
அடுத்த சந்திப்பு ஏனைய தமிழ்க் கட்சிகளையும் உள்ளடக்கி எதிர்வரும் 10 அம் திகதி இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் கருத்து வெளியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், தமது இறுதி நிலைப்பாடு குறித்து எதிர்வரும் 10 ஆம் திகதி அறிவிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இன்றைய சந்திப்பில் பிரதமர் தினேஸ் குணவர்தன, அமைச்சர்களான விஜயதாச ராஜபக்ச மற்றும் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் கலந்துகொண்டுள்ளதுடன், கூட்டமைப்பு சார்பில் அதன் தலைவர் இரா.சம்பந்தன் உட்பட செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.



