தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவளித்தவர்கள் தமிழரசுக் கட்சியிலிருந்து நீக்கப்படும் அபாயம்
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழரசுக் கட்சியின் சின்னத்தில் மற்றும் பெயரில் இணைந்து போட்டியிடுவதற்கு அழைப்பு விடுத்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும் பொதுதேர்தலில் தமிழரசுக்கட்சிக்கு ஆதரவு வழங்காமல், பொதுக்கட்டமைப்புடன் அரசியலை தொடரும் நபர்கள் நிபந்தனை இன்றி கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் எனவும் சுமந்திரன் அறிவித்துள்ளார்.
மன்னாரில் இன்றைய தினம் (30) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கட்சிகளுக்கு அழைப்பு
''நாங்கள் அண்மையில் எமது தமிழரசு கட்சியின் கூட்டத்தில் மேற்கொண்ட தீர்மானம் ஏற்கனவே தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்த கட்சிகள் அனைவரையும் கட்சிக்கு வருமாறு அழைப்பதாகவும், இலங்கை தமிழரசு கட்சியின் பெயரிலும் தமிழரசு கட்சியின் சின்னத்திலும் தேர்தலில் போட்டியிடுவதற்கும் அழைப்பு விடுப்பதாக தீர்மானித்து இருந்தோம்.
அப்படி அவர்கள் வரா விட்டால் இலங்கை தமிழரசு கட்சி ஆகிய நாங்கள் தனித்து போட்டியிடுவதாகவும் ஏற்கனவே தீர்மானம் எடுத்திருந்தோம்.
ஆகவே நியமன பத்திரம் தாக்கல் செய்வதற்கு இன்னும் சிறிது காலமே இருப்பதால் அவர்களும் தங்கள் முடிவுகளை துரிதமாக தெரியப் படுத்துவதனால் வெகுவிரைவில் அன்று நாங்கள் நியமித்த நியமன குழு கூடி கட்சியின் வேட்பாளர்களை நாங்கள் தீர்மானிப்போம்" என கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |