இந்திய அரசின் பிரதிநிதியா சுமந்திரன்?
நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் (ஐந்து பேரடங்கிய குழு) இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவை சந்தித்துள்ளனர்.
குறித்த சந்திப்பு இன்றைய தினம் இந்திய இல்லத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. வடக்கு, கிழக்கு உட்பட இலங்கையின் அபிவிருத்தி, அதிகாரப் பகிர்வு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலய உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
13ஆவது திருத்தத்துக்கு அமைவாகவும் ஐக்கிய இலங்கை என்ற கட்டமைப்புக்குள்ளும் சமத்துவம், நீதி, சமாதானம் மற்றும் கௌரவம் ஆகியவற்றுக்கான தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் இலங்கையின் நல்லிணக்கத்துக்கு இந்தியாவின் நிலையான ஆதரவினை உயர்ஸ்தானிகர் இச்சந்திப்பில் எடுத்துரைத்துள்ளதாக தெரியவந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் குறித்த சந்திப்பால் சுமந்திரன் சர்ச்சையொன்றில் சிக்கியுள்ளார். அதன்படி ஒரு நாட்டினுடைய பிரதிநிதிகள் தூதரகத்தில் கலந்துரையாடலொன்றில் ஈடுபடும் போது ஒரே பக்கமாக அமர்வது ஒரு ராஜதந்திர நடைமுறையாக இருக்கிறது.
ஆனால் இங்கு இந்திய அரசினை பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய தூதுவராலயத்தின் பக்கம் சுமந்திரன் அமர்ந்திருப்பது, அவர் இந்திய அரசின் பிரதிநிதியா என அரசியல் விமர்சகர்கள் கேள்வியெழுப்புகின்றனர்.
இதற்கு முன்னர் இப்படியான ஒரு நடைமுறை இலங்கையில் எந்த தூதுவராலயத்தில் நடைபெற்ற சந்திப்புக்களின் போதும் பின்பற்றப்படவில்லை.
இன்றைய சந்திப்பில் சுமந்திரன் இந்திய அரசின் பிரதிநிதியாக பங்குகொண்டாரா? அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதியாக கூட்டத்தில் கலந்து கொண்டாரா? என்கின்ற சர்ச்சை வலுக்கிறது.



