மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்கி இன்றுடன் மூன்று ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன
முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன (Maithripala Sirisena), மஹிந்த ராஜபக்ஷவுடன் (Mahinda Rajapaksa) உடன்பாட்டை செய்த நிலையில், நல்லாட்சி அரசாங்கத்தை கலைத்து விட்டு மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்கி இன்றுடன் மூன்று ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல (Lakshman Kiriella) நினைவுப்படுதியுள்ளார்.
எதிா்க்கட்சி தலைவா் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளா் சந்திப்பின்போது இவ்வாறு கூறியுள்ளார்.
அத்துடன் அந்த சம்பவத்தின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட நீதிமன்ற நடவடிக்கைகள் காரணமாக மீண்டும் நல்லாட்சி அரசாங்கம் நிறுவப்பட்டமையையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை உணவு உற்பத்தித்திறன் கொண்ட குடிமக்களை உருவாக்க தற்போதைய அரசாங்கம் உறுதியளித்த 10 ஆண்டுத்திட்டத்தை ஒரே தடவையில் நடைமுறைப்படுத்த முயற்சித்தமைக் காரணமாக தற்போதைய சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக லக்ஸ்மன் கிாியெல்ல குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில் செய்தியாளர்கள் கேட்டக் கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார்.
செய்தியாளர் - புதிய உரப்பிரச்சினை இராஜதந்திரப் பிரச்சினையாகிவிட்டதா?
நாடாளுமன்ற உறுப்பினர் - இல்லை, இது ஒரு தனியார் நிறுவனத்தில் உள்ள பிரச்சனை. சீனாவில் உள்ள தனியார் நிறுவனம் என்று சீன அரசு கூறினாலும், இவற்றை வழங்குவது இராஜதந்திர ரீதியானதல் அல்ல.
செய்தியாளர் - ஆனால் இது தூதுவர்கள் வரை சென்றுள்ளதே?
நாடாளுமன்ற உறுப்பினர் - இவர்கள் நீதிமன்றம் சென்று தடையுத்தரவைக் கூட பெற்றுள்ளனர். இன்று பத்திரிகைகளில் தலைப்புச் செய்தியாக, உரத்தை இறக்கக் கூடாது என வந்துள்ளது. நீதிமன்றமும் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இது சிக்கலான பிரச்சனை.
செய்தியாளர் - இது இரு நாடுகளுக்கும் இடையிலான பிரச்சினையாகி விட்டதா?
நாடாளுமன்ற உறுப்பினர் - உரம் இரு நாடுகளுக்கு இடையிலான கொடுக்கல் வாங்கலாக இருந்தாலும் எமது நாட்டிற்கு அச்சுறுத்தல் விடுக்க, அதில் ஒரு தனியார் நிறுவனத்திற்கு உரிமை இல்லை. எங்கள் அரசாங்கத்தை அச்சுறுத்தும் வகையில், மக்கள் வங்கியை மிரட்டியதை பார்த்தேன்.
செய்தியாளர்- உர விவகாரத்தில் அரச அதிகாரிகள் தலையிட்டுள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்- கொள்கைகள் அரசால் வகுக்கப்படுகின்றன. அரச அதிகாரிகள் வகுத்த கொள்கை சரியோ தவறோ அமுல்படுத்தப்படுவது இவர்கள் தான். எனினும் நாளுக்கு
நாள் கொள்கைகளை மாற்றுகிறார்கள். அதிகாரிகள் எப்படி செயல்பட முடியும்?