இலங்கை வம்சாவளியை சேர்ந்த மூன்று வயது சிறுமி பேர்த் மருத்துவமனையில் அனுமதி
அவுஸ்திரேலியாவில் பிறந்த இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த மூன்று வயது சிறுமியை அவுஸ்திரேலிய அதிகாரிகள் கிறிஸ்மஸ் தீவிலிருந்து பேர்த்தில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அந்த சிறுமி கடுமையாக சுகவீனமுற்று இருப்பதால் இவ்வாறு பேர்த் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். தர்னிகா முருகப்பன் என்ற சிறுமி கடந்த மே 25 திகதி முதல் வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் அதிக காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
அவுஸ்திரேலிய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகளின் படி கிறிஸ்மஸ் தீவில் உள்ள தடுப்பு முகாமில் கடமையாற்றும் ஊழியர்கள், சுகவீனமுற்றுள்ள சிறுமியை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல மறுத்துள்ளனர்.
இதனால் சிறுமியின் உடல்நிலை மோசமடைந்து வருவதை அடுத்து அவுஸ்திரேலிய அதிகாரிகள் அவரை பேர்த்தில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்ல உத்தரவிட்டுள்ளனர்.
இதற்கிடையில், தற்போது கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முருகப்பன் குடும்பத்தை அவுஸ்திரேலியாவில் குடியேற அனுமதிக்கலாமா என்பது குறித்து ஆராய்ந்து வருவதாக அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் கெரேன் ஆண்ட்ரூஸ் தெரிவித்துள்ளார்.இது ஒரு சிக்கலான விவகாரம் எனவும் அவர் கூறினார்.
அவுஸ்திரேலியாவுக்கு அகதிகளாக சென்றிருந்த இவர்கள், அங்கு தஞ்சம் கோரியதுடன் அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால், தர்னிகா, அவரது தாய், தந்தை மற்றும் சகோதரி கிறிஸ்துமஸ் தீவில் உள்ள ஒரு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டனர்.
அவர்கள் கடந்த 2019 ஆண்டு முதல் தடுப்பு முகாமில் உள்ளனர்.
அவுஸ்திரேலிய அதிகாரிகள் அவர்களை இலங்கைக்கு நாடு கடத்த முயற்சித்த போது, அவுஸ்திரேலிய நீதிமன்றம் அதற்கு எதிராக தடை உத்தரவு பிறப்பித்து இருந்தது.