யாழ். மாவட்டத்தில் குற்றத் தடுப்புப் பிரிவினரால் மூவர் கைது
ஓட்டை உடைத்து வீடு புகுந்து வாளைக் காட்டி மிரட்டிக் கொள்ளையடிக்கும் கும்பல் யாழ். மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவிடம் சிக்கியது.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் 17ஆம் திகதி யாழ். புன்னாலைக்கட்டுவன் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் ஒருவருடைய வீட்டில் இரவு வேளை வீட்டின் கூரை ஓட்டை உடைத்து உள்நுழைந்த கொள்ளையர்கள் அங்கிருந்தவர்களைத் தாம் கொண்டு வந்த கூரிய வாளைகே காட்டி மிரட்டி மூன்றரைப் பவுண் நகையையும், சி.சி.ரி.வியையும் கொள்ளையடித்துச் சென்றனர்.
இது தொடர்பில் சுன்னாகம் பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.
இதேவேளை, நல்லூர் சங்கிலியன் வீதியிலுள்ள வீட்டினுள் இரவு வேளை உள்நுழைந்த குறித்த சந்தேகநபர்கள் அங்கிருந்தவர்களை மிரட்டி 3 பெறுமதி வாய்ந்த தொலைபேசிகளையும் ஒன்றரைப் பவுண் தங்க நகையையும் கொள்ளையடித்துச் சென்றனர்.
இது தொடர்பில் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது. மேலும், கல்வியங்காட்டுப் பகுதியிலுள்ள வியாபார நிலையத்துக்குள் நுழைந்த கொள்ளையர்கள் அங்கிருந்தவர்களை ஆயுதமுறையில் மிரட்டி பெறுமதி வாய்ந்த பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்றனர்.
இது தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. எனினும், பொலிஸாருக்கு டிமிக்கி கொடுத்து தொடர் கொள்ளையில் ஈடுபடும் குறித்த குழுவினர் தொடர்பில் யாழ். மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி நிகால் பிரான்சிஸ் தலைமையிலான குழுவினர் விசாரனைகளை மேற்கொண்டனர்.
மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் பிரதான சந்தேகநபர்கள் இருவர் உட்பட மூவர் அதிரடியாகக் கைதுசெய்யப்பட்டனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் யாழ். நல்லூர் பகுதியைச் சேர்ந்த 23, 23, 24 வயதுடையவர்கள் எனவும், இவர்களில் ஒருவருக்கு நீதிமன்றப் பிடியாணைகள் உள்ளதுடன் மேலும் பல கொள்ளை வழக்குகளில் தேடப்பட்டு வந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்டவர்களிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் இதுவரை
கொள்ளையடித்த நகைகள் பொலிஸாரால் மீட்கப்பட்டதுடன் கொள்ளையிட்ட தொலைபேசிகளும்
பயன்படுத்தப்பட்ட வாளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.