கந்தளாயில் அனுமதிப்பத்திரமின்றி பாலை மரக்குற்றிகளை கொண்டு சென்ற மூவர் கைது
கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் எழுபது பாலை மரக்குற்றிகளை அனுமதிப்பத்திரமின்றி கொண்டு சென்ற மூவரை கைது செய்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று அதிகாலை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலும் தெரிவிக்கையில்,
வென்ராசன்புர, ரஜஎல மற்றும் முள்ளிப்பொத்தானை பகுதியைச் சேர்ந்த 40, 33 மற்றும் 37 வயதுடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கந்தளாய் - பரவிபாஞ்சான் பிரதேசத்திலிருந்து வென்ராசன்புர பகுதிக்கு உழவு இயந்திரமொன்றில் எழுபது பாலை மரக்குற்றிகளை அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் கொண்டு சென்ற போதே, பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மரக்குற்றிகளுடன் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களைத் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு கந்தளாய் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் கந்தளாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் சந்தேகநபர்கள் பயன்படுத்திய உழவு இயந்திரமும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து
வைக்கப்பட்டுள்ளது.



