நுவரெலியாவில் தொழில் வீசா நிபந்தனைகளை மீறிய இந்தியர்கள் மூவர் கைது
நுவரெலியாவில் தொழில் வீசா நிபந்தனைகளை மீறி உணவகமொன்றில் பணிபுரிந்து வந்த இந்தியர்கள் மூவர் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நபர்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நுவரெலியாவில் உள்ள இரண்டு உணவகங்களில் இருந்து இவர்கள் நேற்று (29.03.2024) கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இந்தியர்கள்
நுவரெலியாவில் உள்ள உணவகமொன்றில் பணிபுரிய இந்திய பிரஜைகளுக்கு வேலை வாய்ப்பு வீசா வழங்கப்பட்டுள்ள நிலையில், எனினும் அவர்கள் குறித்த இடத்தில் பணிபுரியாமல் வேறு இடத்தில் பணிபுரிந்ததாகவும் திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் வழக்கமாக இந்த வகையான பணி அனுமதிகள் தனிநபருக்கு வழங்கப்படுவதில்லை எனவும், எனினும் பணி இடத்துக்கு வழங்கப்படும் வீசாவின் மூலம், வெளிநாட்டவர் ஒருவர் குறிப்பிட்ட பணியிடத்தில் மட்டுமே வேலை செய்ய வேண்டும் என்றும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இந்தியர்கள், இலங்கையில் இருந்து நாடு கடத்தப்படுவதற்கு முன்னர் கொழும்புக்கு அழைத்து வரப்பட்டு வெலிசரவில் உள்ள குடிவரவுத்திணைக்களத்தின் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |