தமிழ் ஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தல் : அநுர அரசுக்கு எதிராக கடும் கண்டனம்
தமிழ் ஊடகவியலாளர்கள் மீது அரச அதிகார பின்னணியில் விடுக்கப்படும் அச்சுறுத்தல்களை வன்மையாகக் கண்டிக்கின்றோம் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் இன்று(02.09.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் ஊடகவியலாளர்கள்
மேலும் தெரிவிக்கையில், "தமிழர் தாயகப் பகுதியில் அரச ஊடகமொன்றில் பணியாற்றும் ஊடகவியலாளர் ஒருவர், அரசின் நிகழ்ச்சி நிரலுக்கு ஒத்துழைக்கவில்லை என்பதற்காக அவதூறுகள், விசாரணைகள் மற்றும் பல்வேறு அழுத்தங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

மக்களுடைய ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதாகச் சர்வதேசத்துக்குக் கூறும் தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசு, தமிழ் ஊடகவியலாளர்களை அச்சுறுத்துவதன் மூலம் தனது உண்மையான முகத்தை வெளிப்படுத்துகின்றது.
அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் ஊடகவியலாளர்களின் உரிமைகளுக்கும் பாதுகாப்புக்கும் நாம் எப்போதும் அரணாக நிற்போம்.
வாக்களித்த மக்கள் வெட்கப்பட வேண்டிய நிலை
வடமராட்சியில் தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர் ஒருவரால் காணி ஒன்றின் மீது கல்லெறிந்து சிசிரிவி கமரா சேதப்படுத்தப்பட்டுள்ளது.

சிசிரிவி காணொளிகள் மற்றும் மேற்படி நபர் ஊடகவியலாளர் சந்திப்பில் வழங்கிய ஒப்புதல் வாக்குமூலம் ஆகியவை இருந்த போதிலும், பொலிஸார் அவரை 24 மணி நேரத்துக்குள் நீதிமன்றத்தில் முற்படுத்தாமல் அதிகாலை 3 மணியளவில் விடுவித்துள்ளமை அப்பட்டமான சட்டவிரோத செயலாகும்.
தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்த மக்கள் தற்போது வெட்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
வடக்கு, கிழக்கில் தமிழர்களின் காணிகளைச் சுவீகரிக்கும் நடவடிக்கைகளைத் தடுப்பதற்குச் சிங்களக் கட்சிகளை வடக்கு, கிழக்கில் இருந்து ஜனநாயக ரீதியாக வெளியேற்றுவதே தமிழர்களின் இருப்பை நிலைநாட்டுவதற்கான வழி" என்றும் குறிப்பிட்டுள்ளார்.