இலங்கையில் அச்சுறுத்தும் இன்புளுவன்சா ஏ வைரஸ் - பொது மக்களுக்கு எச்சரிக்கை
இலங்கையில் இன்புளுவன்சா ஏ வைரஸ் வேகமாக பரவி வருவதாக பொரளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் நிபுணர் ஜூட் ஜயமஹ தெரிவித்துள்ளார்.
ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் இந்த வைரஸின் பரவல் மேலும் அதிகரிக்கக் கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே நிபுணர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

19 மருத்துவமனைகளின் வெளிநோயாளர் பிரிவுக்கு வந்த நோயாளிகள் மற்றும் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறும் நோயாளிகளிடம் இருந்து பெறப்பட்ட சளி பரிசோதனையில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், மாதாந்தம் வெளிநோயாளர் பிரிவுக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளர்களில் ஐந்து வீதத்திலிருந்து பத்து வீதத்திற்கு இடைப்பட்டவர்கள் இன்புளுவன்சா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வழக்கமாக மே முதல் டிசம்பர் வரையிலான காலப்பகுதியில் சிகிச்சைக்காக வரும் நோயாளிகளில் 22 சதவீதம் மற்றும் 33 சதவீதம் பேர் இன்ப்ளூயன்ஸா வைரஸால் கண்டறியப்படுகின்றனர்.
இருமல், சளி, மூச்சு விடுவதில் சிரமம் உள்ளவர்கள் இது குறித்து அவதானமாக இருக்க வேண்டும். இந்த நிலைமைகள் மோசமடைந்தால், மருத்துவ சிகிச்சை பெறுவது அவசியம் என பொரளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் நிபுணர் ஜூட் ஜயமஹ மேலும் தெரிவித்துள்ளார்.