நைஜீரியாவில் பாதுகாப்பு அச்சுறுத்தல் : அமெரிக்க தூதரக ஊழியர்கள் வெளியேற்றம்
நைஜீரியாவில் பயங்கரவாதம், கடத்தல் மற்றும் உள்நாட்டு கலவரங்கள் அதிகரித்து வருவதால், அமெரிக்கக் குடிமக்கள் அந்த நாட்டிற்குப் பயணம் செய்வதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவு திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
குறிப்பாக, தலைநகர் அபுஜாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் "அத்தியாவசியமற்ற" ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பாதுகாப்புக் காரணங்களுக்காக நைஜீரியாவை விட்டு வெளியேற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு முதலீடுகளைப் பாதிக்கக்கூடும்
நைஜீரியாவின் பல பகுதிகளில் பாதுகாப்புச் சூழல் சீர்குலைந்து வருவதாகவும், சந்தைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பாடசாலை போன்ற பொது இடங்களில் எவ்வித முன்னெச்சரிக்கையும் இன்றித் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்றும் அமெரிக்கா எச்சரித்துள்ளது.

நைஜீரியா முழுவதையும் "நிலை 3" எச்சரிக்கைப் பிரிவில் வைத்துள்ள அமெரிக்கா, அங்குள்ள 23 மாநிலங்களை மிகவும் ஆபத்தான "நிலை 4" (Level 4 - Do Not Travel) பிரிவில் சேர்த்துள்ளது.
குறிப்பாகப் பிளாட்டோ, ஜிகாவா, நைஜர் மற்றும் தாராபா போன்ற மாநிலங்களில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளதால், அந்தப் பகுதிகளுக்குச் செல்வதை முற்றிலும் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் நைஜீரியா இடையே பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் உளவுத்துறைப் பகிர்வில் வலுவான ஒத்துழைப்பு இருந்தபோதிலும், கள நிலவரம் பொதுமக்களுக்குப் பாதுகாப்பற்றதாகவே இருப்பதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கை நைஜீரியாவின் பொருளாதார மீட்சி மற்றும் வெளிநாட்டு முதலீடுகளைப் பாதிக்கக்கூடும் என அந்நாட்டு அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.