கூட்டமைப்புக்கு ஆதரவு வழங்கியவர்கள் புறக்கணிக்கப்படும் நிலை - எஸ்.சர்வானந்தன் (Photos)
மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசியல் வேறுபாடுகள் பார்க்கப்பட்டு உதவி திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாகவும், தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு வழங்கியவர்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் மட்டக்களப்பு, ஏறாவூர்ப்பற்று பிரதேசசபையின் தவிசாளர் எஸ்.சர்வானந்தன் (S.Sarvanandan) தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட செங்கலடி - பதுளை வீதியில் உள்ள மக்களின் அடிப்படை பிரச்சினைகள் குறித்து ஆராயும் விசேட கூட்டம் மட்டக்களப்பில் இன்று நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,
செங்கலடி - பதுளை வீதியில் மீன் விற்பனை தொடர்பான முறையான அனுமதிப்பத்திரம் ஒன்றினை வருகின்ற ஆண்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இதே போன்று கறுவாடு உற்பத்திக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு அவர்களுக்கான அதற்கான உற்பத்திகளுக்கான அனுமதிப்பத்திரங்களையும் வழங்கவுள்ளோம்.
நான் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தவிசாளராகவுள்ள நிலையிலும் ஏறாவூர்ப்பற்று பிரதேசசபையின் நிதியினைக்கொண்டு பல்வேறு வேலைத்திட்டங்களை மக்களுக்கு முன்னெடுத்து வருகின்றோம்.
இன்று ஆளும் அரசியல்வாதிகளினால் பொய்கள் மக்கள் மத்தியில் கட்டவிழ்த்துவிடப்பட்டு வருகின்றன. இன்றைய ஆட்சியாளர்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் மானிய, உரமானியம் இலவசமாக வழங்கப்படும் என்று கூறியே விவசாயிகளின் வாக்குகளைப்பெற்று ஆட்சிப்பீடமேறியது.
இன்று விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நாட்டில் பாரிய பஞ்சம் ஏற்படப்போவதாக தெரிவிக்கின்றனர். இதுவெல்லாம் திட்டமிட்டு முன்னெடுக்கப்படும் சதித்திட்டமாகும்.
யுத்த காலத்தில் அரசாங்கத்தின் எந்தவித உதவியுமில்லாமல் நாங்கள் நிம்மதியாக வாழ்ந்திருக்கின்றோம். அந்த அனுபவங்களைக்கொண்டு நாங்கள் எங்களை கட்டியெழுப்ப வேண்டும்.
தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை மூலம் குடிநீரை பெறும்போதே குடிநீர் பிரச்சினைக்கான நிரந்தர தீர்வாக கொள்ளமுடியும்.
கடந்த ஆட்சிக்காலத்தில் செங்கலடி - பதுளை வீதியில் நீர்ப்பிரச்சினையை தீர்ப்பதற்காக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசனின் 50 இலட்சம் ரூபா நிதியொதுக்கீட்டின் மூலமும் சபையின் 30 இலட்சம் ரூபா நிதி மூலமும் சபையின் வாகனங்களைக்கொண்டு கொடுவாமடுவுக்கு குடிநீர்பெற்றுக்கொடுக்கப்பட்டது.
இதேபோன்று காயன்குடாவுக்கான குடிநீரை வழங்குவதற்கான நடவடிக்கையினை முன்னெடுத்துவருகின்றோம்.
இராஜாங்க அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் இங்கு கூறியிருந்தார் பன்குடாவெளியில் கிணறு ஒன்றைக்கட்டுவதாகவும், குடிநீர் வழங்கவுள்ளதாகவும். இது ஒரு பொய்யான கருத்தாகும். அங்கு ஒரு குழிவெட்டப்பட்டிருந்தது. மண் அகழ்வுக்காக ஒரு குழிவெட்டப்பட்டதாக கூறினார்கள். எந்தவித பிரதேசசபை அனுமதியும் பெறப்படாமல் அந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
வேப்பவட்டுவான் வீதியில் மண் ஏற்றுவதை தடைசெய்துள்ளதாகவும், இங்கு இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் பிரத்தியேக செயலாளர் கூறியிருந்தார்.
கிழக்கு மாகாண ஆளுனரிடம் விடுத்தவேண்டுகோளுக்கு அமைவாக ஐந்து கிலோமீற்றர் வீதியை புனரமைப்பதற்கு 36 கோடி ரூபா நிதியைக்கொண்டுவந்து காபட் வீதியாக புனரமைத்துவருகின்றோம்.
அந்த வீதியில் ஒரு கல்லை வைத்துவிட்டுத்தான் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் பாலம் போடப்போகின்றோம் என கூறிவருகின்றார்.
இவ்வாறுதான் இவர்களின் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றது. இந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளை நாங்கள் இரண்டு வருடமாக அனுபவித்துவருகின்றோம். இன்னும் மூன்று வருடங்கள் உள்ளது. அதனையும் எதிர்கொள்வதற்கு நாங்கள் தயாராகயிருக்கவேண்டும்.
மண் அகழ்வுகள் அனுமதியென்பது அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு மட்டுமே வழங்கப்படுகின்றது. கொழும்பு, பொலநறுவை ஆகிய பகுதிகளிலும் இருந்துவந்து மண்
ஏற்றுகின்றனர். ரயிலிலும் மண் ஏற்றிச்சென்றனர் என தெரிவித்துள்ளார்.






ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri