மட்டக்களப்பின் தமிழர் பகுதியை பொலநறுவை மாவட்டத்துடன் இணைக்க தீவிர நடவடிக்கை (Photos)
மட்டக்களப்பு - வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பழம்பெரும் வரலாற்று ரீதியான தமிழர்களின் பூர்வீக இடமான தோணிதாண்டமடு பகுதியை பொலநறுவை மாவட்டத்துடன் இணைக்க முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளை உடனடியாக நிறுத்துமாறு மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்புகளின் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புச்சாக்கேனி கிராம சேவையாளர் பிரிவிலுள்ள தோணிதாண்டமடு பகுதியானது மட்டக்களப்பு –திருகோணமலை மாவட்டங்களின் எல்லைப்பகுதியாகும்.
இப்பகுதியானது நூறுவீதம் தமிழர்களாக வாழும் பகுதியாகும். இப்பகுதியை தொடர்ச்சியாக பொலநறுவை மாவட்டத்துடன் இணைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றது.
அண்மையில் இப்பகுதியில் பொலநறுவையைச் சேர்ந்த எல்லைக் கிராம அதிகாரிகள் இந்தகிராமத்தை பொலநறுவை மாவட்டத்தினுல் இணைத்து அளவைகள் மேற்கொண்டதனை அவதானிக்க கூடியதாக உள்ளது.
அத்துடன் அப்பகுதியில் உள்ள மலையை தொல்லியல் திணைக்களம் கையகப்படுத்தும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் உறுதிப்படுத்திக் கொள்ளக்கூடியதாக உள்ளது.
பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள்
1987ஆம்ஆண்டு இப்பகுதியில் பேரினவாதிகளினால் படுகொலைகள் மேற்கொள்ளப்பட்டதுடன் இப்பகுதியில் உள்ள தமிழ் மக்களை விரட்டியடித்து இப்பகுதியை கைப்பற்றும் வகையிலான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
ஆனால் அவை தடுக்கப்பட்ட நிலையில் தமிழ் மக்கள் தொடர்ச்சியாக தமது பகுதியில் வசித்துவருகின்றனர்.
அத்துடன் தோணிதாண்டமடு பகுதியில் உள்ள மலைகளில் தமிழர்களின் வரலாற்று எச்சங்கள் பல காணப்படுகின்றன.தமிழர்கள் ஆதியாக வழிபாடுகள் மேற்கொண்ட ஆலயங்கள் காணப்படுகின்றன.
அவற்றினை தொல்பொருட்களாக அடையாளப்படுத்தி பௌத்த விகாரைகளை அமைப்பதற்கான முஸ்தீபுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
எனவே இவற்றினை தடுத்து நிறுத்த மட்டக்களப்பு மாவட்ட அனைத்து பொது அமைப்புகளும் அரசியல்வாதிகளும் ஒன்றிணைந்த வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு அரசியலில் ஏற்படவுள்ள மாற்றம்! உருவாகவுள்ள புதிய அரசியல் கூட்டணி |