சட்டத்தை உதாசீனம் செய்த ஜீவன் தொண்டமான்: எழுந்துள்ள கடும் குற்றச்சாட்டு
அமைச்சர் ஜீவன் தொண்டமான், பொறுப்பற்ற முறையில் அப்பட்டமாக சட்டத்தை புறக்கணித்துள்ளதாக இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் குற்றம் சுமத்தியுள்ளது.
இது தொடர்பில் இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
நுவரெலியாவின் பீட்றூ தோட்டத்தில் அமைச்சர் ஜீவன் தொண்டமான், கடந்த 2024 மே 30ஆம் திகதியன்று நடந்துக்கொண்ட விதம், சட்டவிரோத மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத நடத்தை என்றும் சம்மேளனம் குறிப்பிட்டுள்ளது.
நீதி மற்றும் சட்ட ஆட்சியின் கொள்கை
இதன்போது அவர், அச்சுறுத்தல் மூலோபாயங்களை பயன்படுத்தியதுடன், பொறுப்பற்ற வகையில் சட்டத்தை அப்பட்டமான உதாசீனம் செய்தார் எனவும், அமைச்சரின் செயற்பாட்டை வன்மையாக கண்டிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
இத்தகைய நடவடிக்கைகள் நீதி மற்றும் சட்ட ஆட்சியின் கொள்கைகளை மலினப்படுத்துவதாகத் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் பெருந்தோட்டத்துறைசார் அனைத்து தரப்பினரதும் பாதுகாப்பிற்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.
குறித்த பெருந்தோட்ட நிர்வாகத்தால் தாங்கள் நெற்றியில் இடும் சிவப்பு பொட்டை அழிக்கும்படி கேட்டுக் கொண்டதாகவும், இந்த விடயத்திலேயே தாம் தலையிட்டதாகவும் அமைச்சர் கூறியுள்ளமையானது, பொதுமக்களை தவறாக வழிநடத்த முயற்சிக்கும் செயலாகும் என குறிப்பிட்டுள்ளனர்.
இந்தநிலையில் குறித்த சம்பவம் பெருந்தோட்டத்துறைக்குள் சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்துவதன் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்றும் முதலாளிமார் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
சட்டம் ஒழுங்கினை மலினப்படுத்தும் செயற்பாடு
இந்தக் குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் வரையில் இதற்காக குரல் கொடுக்கப் போவதாகத் தெரிவித்துள்ளனர்.
தொழிலாளர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட துறைசார் அனைத்து தரப்பினரதும் பாதுகாப்பினை உறுதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் இலங்கை அரசாங்கமும், பொலிஸாரும் முழுயைமான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரியுள்ளனர்.
சட்டம் ஒழுங்கினை மலினப்படுத்தும் இவ்வாறான செயற்பாடுகளை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |