இது ஒரு இனப்படுகொலைக்கு ஒப்பானதொரு செயலாகும் - பீற்றர் இளஞ்செழியன்
இலங்கை நிர்வாக சேவையில் தமிழ் அதிகாரிகளை புறக்கணித்து இன்றைய அரசு தூர நோக்கோடு நன்கு திட்டமிடப்பட்டுச் சிங்களமயமாக்களுக்கு அத்திவாரம் போட்டுள்ளது. இது ஒரு இனப்படுகொலைக்கு ஒப்பானதொரு செயலாகும் என இலங்கைத் தமிழரசு கட்சியின் பிரமுகர் அ.ஜெ. பீற்றர் இளஞ்செழியன் குற்றம்சாட்டியுள்ளார்.
2017 ஆம் நடைபெற்ற இலங்கை நிர்வாக சேவை தரம் 3 இற்கான மட்டுப்படுத்தப்பட்ட பரீட்சையில் சித்தியடைந்து நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்ட 61 பேரில் 1/4 பங்கிற்கு மேற்பட்ட தமிழர்களும், அதில் முதலாவது இரண்டாவது தரத்தில் சித்தியடைந்தவர்களும் தமிழர்களாகவே இருந்திருந்தனர்.
ஆனால் அண்மையில் வெளியாகிய இலங்கை நிர்வாக சேவை தரம் 3 ற்கான மட்டுப்படுத்தப்பட்ட பரீட்சையில் சித்தியடைந்த தமிழர்கள் யாருமே நேர்முகத்தேர்விற்கான பட்டியலில் உள்ளடக்கப்படவில்லை, தேர்விற்காக அழைக்கப்பட்ட 68 பேரும் சிங்களவர்களே.
ஏற்கனவே தமிழர் தாயக பிரதேசங்களில் உயர் பதவிகளை சிங்களவர்கள் வகித்து வரும் நிலையில் அனைத்து அரச திணைக்களங்களிலும் பெரும்பான்மையினரை நிறைவேற்று அதிகாரிகளாக நியமிப்பதற்கு, இருப்பதற்கு வழிவகை செய்யும் தூர நோக்கோடு அரசு இந்த விடயத்தை இப்பேற்ப்பட்ட நடவடிக்கைகளினூடாக , விடயங்களினூடாக அரசு நன்கு திட்டமிட்டு கையாண்டுள்ளது.
இந்த விடயத்தை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இராஜதந்திரமாக கையாண்டு எமது தமிழ் அதிகாரிகளுக்கு நியாயம் கிடைக்க வழி செய்ய வேண்டும் என்பதுடன்,தற்போதைய அரசும் இதை மறுபரிசீலனை செய்து பாதிக்கப்பட்ட தமிழ் பேசும் அதிகாரிகளுக்கு உரிய முறையில் நீதி வழங்க வேண்டும்.
அதேபோல தமிழ் பிரதேசங்களில் தமிழ் பேசும் அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றேன் என்றும் தெரிவித்துள்ளார்.



