இலங்கை ஏதிலிக்கு இந்திய உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை விமர்சித்துள்ள திருமாவளவன்
இந்தியாவில், இலங்கைத் தமிழர் ஒருவருக்கு, அடைக்கலம் அளிக்க மறுத்த உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து, ஏமாற்றம் வெளியிடப்பட்டுள்ளது வி.சி.கே என்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் இந்த ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்தத் தீர்ப்பு மனிதாபிமான விழுமியங்கள் மற்றும் மனித கண்ணியத்தை மீறுவதாக அவர் விமர்சித்துள்ளார்.
இலங்கைத் தமிழர்
இந்தியாவில் தடைசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளை, மீண்டும் உயிர்ப்பிக்கும் சதியில் ஈடுபட்டதாகக் கூறி, 2015 இல் கைது செய்யப்பட்ட இலங்கைத் தமிழரான சுபாஸ்கரன் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பில உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் வழங்கியது.
முன்னதாக அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார்.
இருப்பினும், 2022 இல் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டுக்கு அமைய அவருக்கான தண்டனை ஏழு ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது.
உயர்நீதிமன்றத்தின் உத்தரவு
உயர்நீதிமன்றம், தண்டனையைக் குறைத்தபோதும், தண்டனைக் காலம் முடிந்தவுடன் அவரை உடனடியாக நாடு கடத்தவும் உத்தரவிட்டிருந்தது.
எனினும் சுபாஸ்கரனின் சட்ட ஆலோசகர், தமது கட்சிக்காரரின் தண்டனை முடித்தவுடன், இந்தியாவில் அவரைதங்க அனுமதிக்குமாறு வாதிட்டார், அவரது குடும்பம் இந்தியாவில் வசிப்பதையும் அவர்; காரணம் காட்டியிருந்தார்.
இருந்தபோதும், இந்திய உயர் நீதிமன்றம் இந்த மனுவை தள்ளுபடி செய்ததுடன், உலகம் முழுவதிலுமிருந்து வரும் ஏதிலிகளுக்கு இந்தியா ஒரு சத்திரமாக இருக்க முடியாது என்றும், வேறு நாட்டில் அடைக்கலம் தேடுமாறும் தமது தீர்ப்பின்போது அறிவுறுத்தியது.
இந்தநிலையில் குறித்த தீர்ப்பை விமர்சித்துள்ள திருமாவளவன், நீதிமன்றத்தின் மொழி மற்றும் தீர்ப்பு அதிர்ச்சியூட்டுவதாக இருப்பதாகவும், துன்புறுத்தப்பட்டவர்களுக்கு அடைக்கலம் வழங்கும் இந்தியாவின் நீண்டகால பாரம்பரியத்திற்கு முரணானது என்றும் கூறியுள்ளார்.
தமிழ் ஏதிலிகள்
உயர் நீதிமன்றத்தின் நிலைப்பாடு, மனிதாபிமானத்தின் கொள்கைகளையும், ஒடுக்குமுறையிலிருந்து தப்பி ஓடுபவர்களுக்கு அடைக்கலம் அளிக்கும், இந்திய நாட்டின் தார்மீகக் கடமையையும் புறக்கணிப்பதாகத் தெரிகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தண்டனைக்கு உள்ளாகி, இந்தியாவில் தமது குடும்பம் வசிக்கும் போது, அந்த குடும்ப தலைவருக்கு அடைக்கலம் மறுப்பது நியாயமானதா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார் மனிதாபிமான அடிப்படையில் தங்குமிடம் வழங்குவது ஒரு நாகரிக தேசத்தின் பொறுப்பு இல்லையா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
எனவே இலங்கையைச் சேர்ந்த தமிழ் ஏதிலிகள் மீது மிகவும் இரக்கமுள்ள அணுகுமுறையை எடுக்குமாறு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.
