மீண்டும் பதின்மூன்றா....!
“இதனால் நாடு பிளவுபடாது. விசேடமாக 13ஆவது திருத்தம் தொடர்பில் ஐந்து நீதிபதிகள் அடங்கிய குழுவின் தீர்மானத்தின்படி பார்த்தால் நாம் ஒற்றையாட்சிக்குள் இருக்கிறோம். அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதற்கு நான் உடன்படுகின்றேன். நாம் தற்போது உருவாக்கிக் கொண்டுள்ள மாகாண சபைகளுக்கு லண்டன் நகரசபைக்குள்ள அதிகாரங்கள் கூட கிடையாது. லண்டன் நகரசபைக்கு இதனைவிடவும் அதிகாரங்கள் உள்ளன. எனவே, இதனை பெடரல் இராச்சியம் எனக் கூறமுடியுமென நான் நினைக்கவில்லை”
– ஜனாதிபதி ரணில்
13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை தமிழ்த் தரப்பிடமிருந்துதான் முதலில் வெளிப்பட்டது.
ஆறு கட்சிகள் இணைந்து இந்தியாவை நோக்கிக் கூட்டுக் கோரிக்கையை வைத்தபொழுது அது ஒரு வாதப்பொருளாக மாறியது. கடந்த தைப்பொங்கல் விழாவில் வைத்து ரணிலும் அதைத்தான் சொன்னார்.
இப்பொழுது ஜெய்சங்கரும் அதைத்தான் கூறியிருக்கிறார். ஒரு இடைக்கால ஏற்பாடாக 13ஐ முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று. அவர் அவ்வாறு கூறுவதற்கு சில கிழமைகளுக்கு முன்பு தயான் ஜயதிலக்கவும் அதுபற்றிக் கூறியிருந்தார்.
13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கத்திற்கு 15 ஆண்டுகள் அவகாசம் கொடுக்க வேண்டும் என்று தயான் கூறுகிறார்.
இந்தியாவை வைத்துத் தமிழ்த் தரப்பைக் கையாள முடியும்
ரணில் விக்ரமசிங்க கூறுகிறார் தனக்கு ஒன்றரை ஆண்டுகள் தேவை என்று.
எனவே கூட்டிக்கழித்துப் பார்த்தால் 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது என்பது ஒரு வலிமையான கருத்தாக மேலெழுகிறது. அது ரணில் விக்ரமசிங்கவுக்கு வசதியானது.
அவர் முன்பு மைத்திரியோடு ஆட்சியைப் பகிர்ந்த காலகட்டத்தில் சம்பந்தரோடு இணைந்து உருவாக்கிய ஒரு புதிய யாப்புக்கான இடைக்கால வரைபானது 13ஆவது திருத்தத்தைக் கடந்து செல்கின்றது. அதை அவர் “ஏக்கிய ராஜ்ய” என்று கூறினார்.
இதுபோன்ற ஒரு தீர்வை கட்டியெழுப்புவது குறித்து அவர் இந்தியாவுக்கு தெரிவித்திருக்கவில்லை. தமிழ்த் தரப்பும் தெரிவித்திருக்கவில்லை.
அவ்வாறு தமக்கு தெரிவிக்கவில்லை என்பதனை அப்போதிருந்த இந்தியத் தூதுவர் சம்பந்தரை சந்தித்தபோது குறிப்பிட்டுச் சுட்டிக்காட்டியிருந்தார். அது சண்டே டைம்ஸ் பத்திரிகையில் வெளியாகியிருந்தது.
ஆனால், இப்பொழுது ஏக்கிய ராஜ்யவிலிருந்து கீழிறங்கி மீண்டும் 13ஐ முழுமையாக நடைமுறைப்படுத்துவது என்ற நிலைக்கு அரசியல் வந்திருக்கிறது. மகிந்தவும் 13ஐ ஏற்றுக் கொள்கிறார், சஜித்தும் 13ஐ ஏற்றுக் கொள்கிறார்.
எனவே, பெரிய சிங்களக் கட்சிகள் மத்தியில் அதற்கு எதிர்ப்பு இல்லை.
அதனால் 13ஐ முழுமையாக நடைமுறைப்படுத்துவது என்ற விடயத்தில் ரணிலுக்குப் பெரிய சவால்கள் இல்லை. மேலும் அதன் மூலம் இந்தியாவை வைத்துத் தமிழ்த் தரப்பைக் கையாள முடியும் என்றும் அவர் நம்புவார்.
ரணில் ஜனாதிபதியாக வருவதை இந்தியா விரும்பவில்லை
இந்தியா கடந்த ஆண்டு இலங்கைத் தீவில் ஒப்பீட்ளவில் அதிகமாகப் பெற்றுவிட்டது. பொருளாதார நெருக்கடியின் பின்னணியில் முதலில் உதவிய நாடாகவும் அதிகமாக உதவிய நாடாகவும் இந்தியா காணப்படுகிறது.
அதன் மூலம் இந்தியா, இலங்கை மீதான தனது பிடியை ஒப்பீட்டளவில் அதிகரித்த அளவில் இறுக்கிக் கொண்டு விட்டது.
கடந்த 13 ஆண்டுகளில் இந்தியா, இலங்கைத் தீவில் அதிகம் பெற்றுக் கொண்ட ஒரு ஆண்டாக கடந்த ஆண்டைக் குறிப்பிடலாம். கடனை மீளக்கட்டமைக்கும் விடயத்திலும் சீனாவை முந்திக் கொண்டு இந்தியா, இலங்கைக்கு சாதகமாக முடிவுகளை எடுத்தது.
இதிலுள்ள வேடிக்கை என்னவென்றால், இந்தியா கடனை மீளக் கட்டமைக்கத் தயார் என்ற செய்தியை “இந்து” பத்திரிகையைப் பார்த்துத்தான் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி அறிந்துகொண்டார். ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக வருவதை இந்தியா விரும்பவில்லை என்று கருதப்பட்டது.
ஆனால், இந்தியாவை சுதாகரிப்பதில் அவர் கடந்த ஆண்டு முழுவதிலும் வெற்றிகரமாக உழைத்திருப்பதாகவே தெரிகிறது.
அவரை இந்தியாவுக்கு வருமாறு ஜெய்சங்கர் கடந்த வாரம் உத்தியோக பூர்வமாக அழைப்பு விடுத்திருக்கிறார்.
இவ்வாறு நெருக்கடியான காலத்தில் உதவி புரிந்ததன் மூலம் இந்தியா, சீனாவை முந்திக்கொண்டு கொழும்பை அதிகம் நெருங்கி வரலாமா என்று முயற்சிக்கின்றது.
தந்திரசாலியான ரணில்
இவ்வாறு இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையிலான ராஜதந்திரப் போட்டிக்குள் ஈழத் தமிழர்களை நுட்பமாக சிக்க வைக்கும் தந்திரம்மிக்கவர் ரணில் விக்ரமசிங்க என்பதே ஈழத் தமிழர்களுக்கு இதிலுள்ள பாதகமான அம்சமாகும்.
தந்திரசாலியான ரணில் மூன்று முனைகளில் விடயங்களை அணுகுகிறார்.
முதலாவது தமிழ்த் தரப்போடு பேச்சுவார்த்தை. இரண்டாவது இந்தியாவை வளைத்துப் போடுவது. மூன்றாவது ஐ.நாவை சுதாகரிப்பது.
ஒருபுறம் 13, இன்னொருபுறம், நிலைமாறுகால நீதி. இந்த இரண்டையும் சமாந்தரமாக அவர் முன்னெடுக்க முயற்சிக்கக்கூடும்.
தென்னாபிரிக்கப் பாணியிலான நல்லிணக்க முயற்சி என்று கூறிக்கொண்டு அவர் நிலைமாறு கால நீதிச் செயற்பாடுகளை புதிய வடிவத்தில் உயிர்ப்பிக்க முடியும். அதன்மூலம் அவர் ஐ.நாவைச் சமாளிக்கலாம்.
ஐ.நா தீர்மானங்களில் 13ஆவது திருத்தம் ஒரு தீர்வாக முன்வைக்கப்படுகிறது. இந்தியா அதை ஊக்கிவித்தது.
எனவே நிலைமாறுகால நீதி, 13ஆவது திருத்தம் என்பவற்றின் ஊடாக ரணில் பல இலக்குகளை அடைய முயற்சிக்கிறார்.
கடந்த 21ஆம் திகதி சம்பந்தரையும், சுமந்திரனையும் அவர் சந்தித்தபோது, அவர் தெரிவித்த கருத்துக்களின் பிரகாரம், 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்குரிய சாத்தியமான வழிமுறைகளை அரசாங்கம் சிந்திக்கிறது என்ற ஒரு தோற்றம் ஏற்படத்தக்க விதத்தில் கதைத்திருக்கிறார்.
கடந்த 26ஆம் திகதி நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் விக்னேஸ்வரன், ஜனாதிபதியிடம் ஓர் அறிக்கையை கையளித்துள்ளார்.
13ஐ முழுமையாக நடைமுறைப்படுத்தல்
இதில், மாகாணத்திடம் இருந்து மத்திய அரசாங்கம் பறித்துக் கொண்ட அதிகாரங்களை மீளப்பெறுவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பிரஸ்தாபிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்தக் கூட்டத்தில் பேசிய ஜனாதிபதி ரணில், “ நாம் தற்போது உருவாக்கிக் கொண்டுள்ள மாகாண சபைகளுக்கு லண்டன் நகரசபைக்குள்ள அதிகாரங்கள் கூட கிடையாது, லண்டன் நகரசபைக்கு இதனை விடவும் அதிகாரங்கள் உள்ளன. எனவே, இதனை பெடரல் இராச்சியம் எனக் கூறமுடியுமென நான் நினைக்கவில்லை” என்று கூறியுள்ளார்.
இவ்வாறு பலவீனமான 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதை சிங்களக் கட்சிகள் எதிர்க்கக் கூடாது என்று அவர் கூற வருகிறாரா?
13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தப்போவதாக ஒரு தோற்றத்தை கட்டியெழுப்புவதன் மூலம் அவர் இந்தியாவைத் திருப்திப்படுத்தலாம். ஒரு பகுதி தமிழ்க் கட்சிகளைத் திருப்திப்படுத்தலாம்.
இதில், 13ஆவது திருத்தத்தை ஒரு இடைக்கால ஏற்பாடாகக் ஏற்றுக்கொள்ளாத தமிழ்த் தரப்புகள் என்ன செய்யப் போகின்றன? தமது தீர்வு முன்மொழிவை நோக்கி அக்கட்சிகள் கடந்த 13 ஆண்டுகளாக எப்படி உழைத்திருக்கின்றன?, என்னென்ன தியாகங்களைச் செய்திருக்கின்றன?, ஒரு அரசியல் இலக்கை முன்வைத்து அதை நோக்கி உழைக்கத் தேவையான கட்டமைப்புகள் தமிழ்க் கட்சிகளிடம் உண்டா?, தாம் விரும்பும் ஒரு தீர்வுக்காக போராடவோ தியாகம் செய்யவோ எத்தனை தமிழ் அரசியல்வாதிகள் தயார்? இந்த வெற்றிடத்தைத்தான் ரணில் விக்ரமசிங்க வெற்றிகரமாக கையாளப்பார்க்கிறார்.
பேச்சுவார்த்தை
இந்த வெற்றிடத்தைத்தான் ஜெய்சங்கர், “தீர்வைப் பற்றி பேசுவதே தீர்வு ஆகிவிடாது” என்று சுட்டிக்காட்டியிருக்கிறார்.
அதாவது, பொருளாதார நெருக்கடியின் பின்னரான தமிழ் அரசியல் எனப்படுவது மீண்டும் ஒருதடவை அதன் இயலாமையை நிரூபித்துக் கொண்டிருக்கிறது.
உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை எதிர்கொள்வதில் மட்டுமல்ல, இந்தியாவை எதிர்கொள்வதில், ஐ.நாவை எதிர்கொள்வதிலும், சீனாவை எதிர்கொள்வதிலும், உலக சமூகத்தை எதிர்கொள்வதிலும், குறிப்பாக மேற்சொன்ன அனைத்துத் தரப்புகளையும் கெட்டித்தனமாகக் கையாளும் ரணிலை எதிர்கொள்வதில் தமிழ்த் தரப்பு மீண்டும் ஒரு தடவை தோற்கப் போகிறதா?
அண்மை நாட்களாக தமிழ் சமூகவலைத்தளங்களிலும், கைபேசிச் செயலிகளிலும் ஒரு “ரிக் ரொக்” காணொளி தொடர்ந்து பகிரப்பட்டு வருகிறது.
இதில் இறுதிக் கட்டப் போரில் தமிழ் மக்களைத் தோற்கடிப்பதற்காக எந்தெந்த நாடுகள் என்னென்ன உதவிகளைச் செய்தன என்ற விபரம் சுருக்கமாகத் தரப்படுகிறது.
இந்தியாவில் தொடங்கி கிரேக்கம் வரையிலும், உலகப் பேரரசுகள், அமெரிக்காவுக்கு எதிரான சிறிய நாடுகள், ஐ.நா, ஐரோப்பிய ஒன்றியம், இஸ்லாமிய நாடுகள், கிழக்கு ஐரோப்பிய நாடுகள் என்று உலகின் பெரும்பாலான நாடுகள் உதவியுள்ளன.
கோட்பாட்டு வேறுபாடுகளுக்கு அப்பால், மத வேறுபாடுகளுக்கு அப்பால், உலகம் முழுவதிலும் உள்ள பெரும்பாலான பலசாலி நாடுகள் ஒரு சிறிய மக்கள் கூட்டத்தை சுற்றிவளைத்திருக்கின்றன என்பதயே இச்சிறிய காணொளி விவரிக்கின்றது.
தமிழ் மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்
இருப்பின், ஐநாவும் உட்பட உலகின் பெரும்பாலான நாடுகள் ஈழத் தமிழர்களைத் தோற்கடிப்பதற்காக ஒன்று திரண்டனவா?, அவை அவ்வாறு திரளக் காரணம் என்ன?, பிராந்தியத்தில் எதிரும் புதிருமாக காணப்படும் அமெரிக்கா-சீனா, இந்தியா - சீனா, இந்தியா- பாகிஸ்தான் ஆகிய நாடுகளை தமிழ்மக்களுக்கு எதிராக ஒரே கோட்டில் கொண்டு வந்து நிறுத்த எப்படி இலங்கை அரசாங்கத்தால் முடிந்தது?
இஸ்ரேல்-ஈரான் ஆகிய எதிரும் புதிருமான நாடுகளை எப்படித் தமிழ் மக்களுக்கு எதிராக ஒரே கோட்டில் வந்து நிறுத்த முடிந்தது?, சிங்கள மக்கள் அரசுடைய ஒரு தரப்பாக இருப்பதுதான் அதற்குக் காரணமா?, அப்படியென்றால் அரசற்ற தரப்பாகிய தமிழ் மக்கள் இதிலிருந்து எதைக் கற்றுக் கொள்ளவேண்டும்?, ஒரு சிறிய மக்கள் கூட்டத்துக்கு எதிராக முழு உலகமும் எப்படி நீசமாக மாறியது?
பிராந்தியத்தில், அனைத்துலகில், எதிரெதிரான சக்திகளை எப்படி மஹிந்த ராஜபக்ச தமிழ் மக்களுக்கு எதிராகத் திருப்பினார்? என்ற கேள்விகளுக்கு தமிழ் மக்கள் விடை கண்டுபிடிக்க வேண்டும்.
அந்த விடைகளைக் கடந்த 13 ஆண்டுகளாக கண்டுபிடிக்க தவறிய வெற்றிடத்தில்தானா இப்பொழுது பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன? 13 மீண்டும் அரங்கிற்குள் வந்திருக்கிறது.

ஜீ தமிழில் சரிகமப-டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிகளின் மகா சங்கமம்... மேடையில் நடந்த எமோஷ்னல் சம்பவம் Cineulagam
