வடமாகாண கல்வி பொறுப்பதிகாரி தொடர்பில் திலகநாதன் எம்.பி கடும் குற்றச்சாட்டு
வட மாகாணத்தில் பணியாற்றும் கல்வி பொறுப்பதிகாரி பொறுப்புணர்வற்றவர் என தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்லத்தம்பி திலகநாதன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.
கல்வியில் வளர்ச்சி தேவை
அவர் மேலும் தெரிவிக்கையில், 225 நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட இந்த நாடாளுமன்றத்தில் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்த கிராமம் என்ற வகையில் இந்த கிராமமானது பெருமை அடைகின்றது.

அதேபோன்று இந்த கூமாங்குளம் வட்டாரமானது ஐந்து பிரதேச சபை உறுப்பினர்களை கொண்டுள்ளது. இது கடந்த யுத்த காலத்தில் பல்வேறு வகையான அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்துள்ளது.இருந்த போதிலும், தற்போது அரசாங்கம் கிராமத்திற்கு பல்வேறுபட்ட அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன்படி, இந்த கிராமத்திலுள்ள பல வீதிகள் புனரமைக்கப்பட்டுள்ளன. அதே போன்று, இந்த கிராமத்தை நாங்கள் அபிவிருத்தி செய்ய வேண்டுமானால் முதலில் கிராமம் கல்வியில் அபிவிருத்தி அடைய செய்ய வேண்டும்.
பொருளாதாரம் இன்று நிலைத்து நிற்க வேண்டும் என்றால் கல்வியினுடைய அபிவிருத்தி தான் முக்கியம். கல்வியினுடைய அபிவிருத்தி இல்லாத எந்தவொரு அபிவிருத்தியும் நிலைபேறற்றது.
ஆகவே, எமது கிராமத்தின் கல்வியை அபிவிருத்தி செய்வதன் மூலம் இங்கே இருக்கின்ற சிறுவர்களின் எதிர்காலத்தை சிறப்பானதாக மாற்றலாம். இந்த கிராமத்தில் சுமாராக 7000 குடிமக்கள் இருக்கின்றார்கள். இவர்களை கல்வியால் மாத்திரமே முன்னேற்றமடையச் செய்யலாம்.

உதாரணமாக, இலங்கையினுடைய மொத்த தேசிய உற்பத்தியில் வடக்கு மாகாணமானது 4.4 வீதம் பங்களிப்பு செய்கின்றது. இந்த விடயம் கவலையடையச் செய்கின்றது என்றாலும் இதற்கு கல்வியின் வீழ்ச்சி தான் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
போதைப்பொருள் பாவணை அதிகரிப்பு
அதே சமயம், வடக்கு மாகாணமானது கல்வியில் இலங்கையில் ஒன்பதாவது இடத்தில் இருக்கிறது. இதுவொரு பின்தங்கிய நிலையாக பார்க்கப்பட்டாலும் வடமாகாணம் போதைப்பொருள் பாவணையில் முதல் இடத்தில் இருக்கின்றது.
கல்வியில் தாழ்ந்த நிலையிலும், போதைப் பொருள் பாவணையில் உயர்ந்த நிலையிலும் காணப்படுவதற்கு பலரும் விளக்கம் கொடுக்கிறார்கள். போதைப்பொருள் பாவணை அதிகரித்தால் கல்வியில் அது வீழ்ச்சியை தான் ஏற்படுத்தும். இதற்கு எல்லாம் காரணம் இந்த சபையில் இருக்கின்ற உயர் அதிகாரிகள்.

வினைத்திறன் குன்றியவர்களாக இருக்கும் அதிகாரிகள் இருக்கின்ற வளங்களை சமனாக பகிர்ந்தளிக்கக் கூடிய திறமையற்றவர்களாக இருக்கிறார்கள்.
இவ்வாறான திறமையற்றவர்களை பொறுப்பில் இருந்து நீக்கி விட்டு, பொறுப்புணர்வுள்ள, நேர்மையான, திறமையான அதிகாரிகளை நியமிப்பதன் மூலம் மீண்டும் கல்வியை வளர செய்வதன் மூலம் வடக்கு மாகாணத்தை பொருளாதாரத்தில் உயரச் செய்ய முடியும்.
13ஆம் திருத்த சட்டத்தில் கல்வியினுடைய பல்வேறுபட்ட அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது. அந்த அதிகாரத்தின் அடிப்படையில் ஆசிரியர் வெற்றிடமாக உள்ள பாடசாலைகளுக்கு ஆசிரியர்களை நியமிக்க முடியும். ஆனால் அவ்வாறு நியமிக்கவில்லை.
இருப்பினும், இனிவரும் காலத்தில் ஜனாதிபதியினுடைய நேரடி வழிகாட்டுதலின் கீழும், வடக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அமைச்சர் பிமல் ரத்நாயக்கவுடைய கண்காணிப்பின் கீழும் திறமையற்ற அதிகாரிகளை நீக்கி திறமையான அதிகாரிகளை பணியில் அமர்த்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
பிரசவ வலியால் துடித்த கனேடிய பெண்: பனிப்புயலை பொருட்படுத்தாமல் இந்திய சாரதி செய்த உதவி News Lankasri