நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற கைது நடவடிக்கைகள்(Photos)
நாடளாவிய ரீதியில் பல்வேறு குற்றச்செயல்களின் அடிப்படையில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அந்தவகையில் அச்சுவேலி வடக்கு கந்தசாமி கோயில் பகுதியில் நேற்று முன்தினம்(02.01.2023) இரவு 12 மணிக்கு வீடு புகுந்து திருட முற்பட்ட திருடன் ஒருவனை ஊர்மக்கள் மடக்கி பிடித்துள்ளனர்.
குறித்த நபரிடம் இருந்து சுமார் 02இலட்சம் ரூபா பெறுமதியிலான நகையுடான பணமும் கைப்பெற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேலதிக விசாரணையினை அச்சுவேலிபொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
செய்தி-கஜிந்தன்
காத்தான்குடி
காத்தான்குடி எம்.பி.சீ.எஸ். வீதியைச் சேர்ந்த அஹமத் நுஸ்கி என்றொரு நபர் ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புகளைப் பேணிய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீண்ட புலனாய்வு மற்றும் அவதானிப்புகளின் பின்னர் கொழும்பில் இருந்து காத்தான்குடி சென்ற ராணுவப் புலனாய்வுப் பிரிவு நேற்று முன்தினம்(02.01.2023) அவரைக் கைது செய்திருந்தது.
அதன் பின்னர் அவர் ராணுவத்தின் வழமையான விசாரணையின் பின்னர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
தற்போதைக்கு சந்தேகநபர் பயங்கரவாத தடுப்புப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அவரிடம் மேலதிக விசாரணைகள் நடைபெறுவதாகவும் தெரிய வந்துள்ளது.
கடந்த ஒக்டோபர் மாதம் இந்தியாவின் கோயம்புத்தூர் நகரில் நடைபெற்ற எரிவாயு சிலிண்டர் வெடிப்புச் சம்பவம் தொடர்பாக இந்திய தேசிய புலனாய்வு ஏஜன்சியான என்.ஐ.ஏ.வினால் கடந்த வாரம் கைது சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சனோபர் அலியுடனும் இன்னும் ஒருவருடனும் அஹமத் நுஸ்கி தொடர்பில் இருந்ததாக தெரிய வந்துள்ளது.
அத்துடன் இவருக்கும் சஹரான் குழுவினருக்கும் இடையில் தொடர்புகள் இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகின்றது.
இவ்வாறான நிலையில் ராணுவப் புலனாய்வுப் பிரிவினர் நீண்ட புலனாய்வு அவதானிப்பு மற்றும் தகவல் சேகரிப்புகளின் அடிப்படையில் கிடைக்கப் பெற்ற ஆதாரங்களின் அடிப்படையில் அஹமத் நுஸ்கியை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்தி-அனதி
வவுனியா
வவுனியா பூவரசங்குளம் வேலங்குளம் கோவில்மோட்டை பகுதியில் நேற்று இடியன் துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாரின் சோதனை நடவடிக்கையில் சட்டவிரோதமாக பதிவுகளின்றி இடியன் துப்பாக்கி வைத்திருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பூவரசங்குளம் வேலங்குளம் கோவில்மோட்டை பகுதியில் ஒரு வீட்டிற்கு சென்ற பொலிஸார் வீட்டினை சோதனை செய்த போது பதிவுகள் ஏதுமின்றி சட்டவிரோதமாக துப்பாக்கி ஒன்றை வைத்திருந்ததன் பேரிலே இரண்டு பிள்ளைகளின் தந்தையான 35 வயதுடையவர் இடியன் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பூவரசங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைகளின் பின்னர் இன்று நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளனர்.
செய்தி-ஷான்
புத்தளம்
புத்தளம் நவகத்தேகம பகுதியில் விவசாயத் தோட்டமொன்றில் கஞ்சாச் செடி வளர்த்து வந்த ஒருவர் நேற்று பிற்பகல் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கஞ்சா செடிகள் சட்டவிரோதமாக வளர்க்கப்படுவதாக பொலிஸாருக்குக் கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய குறித்த பகுதியில் சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது 10 அடி நீளமுடைய 6 கஞ்சாச் செடிகள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நவகத்தேகம கொங்கடவல பகுதியைச் சேர்ந்த ஒருவரென பொலிஸார் இதன்போது தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரையும் கைப்பற்றப்பட்ட கஞ்சாச் செடிகள் ஆகியவற்றையும் ஆனமடுவ நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நவகத்தேகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
செய்தி-அஷார்
பளை
பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முகாவில் பகுதியில் பாடசாலை ஒன்றில் திருட முற்பட்ட இளைஞன் ஒருவரை கிராம இளைஞர்கள் மடக்கி பிடித்து பளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
பளை முகாவில் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை இரவு பாடசாலையில் உள்ள அறைகளை உடைத்து பொருட்களை திருடி கொண்டு செல்ல முற்பட்ட வேளை முகாவில் பிரதேச இளைஞர்கள் இணைந்து குறித்த இளைஞனை மடக்கி பிடித்து பளை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக பளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தி-எரிமலை
யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பகுதியில் 17 வயதான சிறுமி ஒருவரை தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் பொலிஸ் உத்தியோகஸ்த்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பொலிஸ் உத்தியோகஸ்த்தர் நேற்று செவ்வாய்க்கிழமை(03) கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பருத்தித்துறை பகுதியில் 17 வயதான சிறுமி ஒருவரை நிவாரணம் தருவதாக அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகவும், பின்னர் காணொளி பதிவுகளை எடுத்து அதனை பயன்படுத்தி தொடர்ச்சியாக சிறுமியை துஷ்பிரயோகம் செய்துவந்த நிலையில் சிறுமி சுகயீனமடைந்தது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், சிறுமி தொடர்ச்சியாக துஷ்பிரயோகத்திற்கு உள்ளானமை அம்பலமானதாகவும் பின்னர் சிறுமி வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் பொலிஸ் உத்தியோகஸ்த்தர் கைது செய்யப்பட்டுள்ளதாக தொியவருகின்றது.
குறித்த சந்தேகநபரை இன்று புதன்கிழமை(04) நீதிமன்றில் முற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
செய்தி-தீபன்
மட்டக்களப்பு
மட்டக்களப்பு தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் இராணுத்தினரால் ஆக்கிரமிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதன் முத்தாய்ப்பாக துயிலும் இல்லத்தில் இராணுவ புலனாய்வாளர்களினால் திட்டமிடப்பட்ட வகையில் சில நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளது.
இதனை கண்டிக்கும் முகமாக இன்று மட்டக்களப்பில் பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு மக்கள், அரசில்வாதிகள் என அதிகளவில் பங்கெடுக்க வேண்டும் என நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும், தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் நாயகமுமான எம்.கே.சிவாஜிலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.
செய்தி-எரிமலை,தீபன்
முல்லைத்தீவு
முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேசத்திற்கு உட்பட்ட தியோநகர் பகுதி ஒன்றில்
கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் மற்றும் கிராமசேவை
உத்தியோகத்தர் பணிக்கு இடையூறு ஏற்படுத்தியமை மற்றும் தாக்க முற்பட்ட
குற்றத்திற்காக இருவரை முல்லைத்தீவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று மாலை (03.01.2023) இடம்பெற்றுள்ளது.
தியோநகர் கடற்தொழிலாளர்களின் கரைவலைப்பாட்டு காணி பிணக்கு ஒன்றினை கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட சென்றபோது கடற்தொழிலாளர்கள் மற்றும் மக்களுக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக பிரதேச செயலாளர் மீது தவறான வார்த்தைகளால் பேசி தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளரினால் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து சம்பவத்துடன் தொடர்புடைய இருவரை முல்லைத்தீவு பொலிஸார் கைதுசெய்துள்ளார்கள்.
இதேவேளை காலம் காலமாக கரைவலைப்பாடு மற்றும் கடற்தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் கடற்தொழிலாளர்களின் கடற்கரை பகுதி காணி ஒன்றினை தனியார் உணவகம் ஒன்றிற்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் இதனால் தமது தொழில் நடவடிக்கையினை முன்னெடுக்க முடியாது உள்ளதாகவும் கடற்தொழிலாளர்கள் தொடர்ச்சியாக பலரிடம் முறையிட்டு வந்துள்ள நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
செய்தி-கீதன்