ரெலோவும் சிறந்த முதலமைச்சர் வேட்பாளரை இனங்கண்டு பிரேரிப்பதற்கான சந்தர்ப்பங்கள் இருக்கின்றன! - சுரேந்திரன்
தமிழ் ஈழ விடுதலை இயக்கமும் (ரெலோ) சிறந்த ஒரு முதலமைச்சர் வேட்பாளரை இனங்கண்டு பிரேரிப்பதற்கான சந்தர்ப்பங்கள் இருகின்றதாக தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
ஆகவே முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகள் கூடி முடிவெடுத்தே தீர்மானிக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைமைக்குழுக்கூட்டம் வவுனியாவில் நேற்று இடம்பெற்றிருந்தது. இதில் கலந்து கொண்ட போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வவுனியாவில் இடம்பெற்ற எமது கட்சியின் தலைமைக் குழுக்கூட்டத்தில் கட்சியின் பேச்சாளராக நான் தெரிவு செய்யப்பட்டுனள்ளேன். அதன்டிப்படையில் எமது கட்சியின் தலைமைக் குழுக் கூட்டத்தில் பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
நடந்து கொண்டிருக்கும் அரசியல் நிலமைகள் விவாதிக்கப்பட்டன. ஐக்கிய நாடுகள் சபையில் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்த விடயங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
உறுதியாக நடைமுறைப்படுத்தப்படும் என உதவி ஆணையாளர் தெரிவித்த கருத்தை வரவேற்கின்றோம்.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் விடுத்த கோரிக்கையை நடைமுறைப்படுத்துவதற்கு அனைத்து அங்கத்துவ நாடுகளின் ஆதரவையும் கோரி நிற்கின்றோம். குறிப்பாக இந்தியாவின் ஆதரவை கோரி நிற்கின்றோம்.
ஆணையாளரின் விடயங்களில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு நீதி பொறிமுறை, பொறுக்கூறல் விடயத்தை பாராப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து சிவில் சமூக பிரதிநிதிகள், மதத் தலைவர்கள், பல்கலைகழக மாணவர்கள் ஆரம்பித்துள்ள சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்திற்கு எமது கட்சியும் பூரண ஆதவை வழங்குகின்றது.
அரசியல் யாப்பு சீர்திருத்தம் தொடர்பில் எமது கட்சியின் சார்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக ஒரு அரசியல் தீர்வு வரைபினை நாங்கள் கையளித்துள்ளோம்.
எமது நீண்டகால கோரிக்கைளை நிறைவேற்றக்கூடிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும். அதனை அரசாங்கம் கருத்தில் கொள்ள வேண்டும் என்பதை அரசாங்கத்திற்கு வலியுறுத்துகின்றோம்.
அதேவேளை, அரசியல் யாப்பில் ஏற்கனவே இருக்கின்ற 13வது திருத்தச் சட்டத்தை முற்று முழுதாக அமுல்படுத்தி அதில் இருக்கின்ற அதிகாரங்களை முழுமையாக வழங்கி, மாகாணசபைத் தேர்தலை விரைவாக நடத்தி அரசியல் தீர்வுக்கான ஆரம்ப கட்ட நடவடிக்கையாக இந்த அதிகாரங்களை பகிர்ந்தளிக்க வேண்டும்.
முற்று முழுதான அதிகார பகிர்வுடன் கூடிய 13 வது திருத்த சட்டத்தை அடிப்படையாக கொண்ட மாகாணசபைத் தேர்தலை இயன்றவரையில் விரைவாக நடத்த வேண்டும் என எமது கட்சி அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைக்கிறது.
தற்போது பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்கின்ற 10 கட்சிகளினுடைய கூட்டு சம்மந்தமாகவும் எமது தலைமைக்குழு தீர்மானங்களை எடுத்துள்ளது.
2001 ஆம் ஆண்டில் இருந்து நாம் ஆயுத ரீதியாக பலப்பட்ட ஒரு இனமாக இருந்த போது உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் ஒரு பலமான அமைப்பாக இயங்கி வந்திருக்கின்றது.
அதிலிருந்து சில கருத்து வேறுபாடுகள் காரணமாக பிரிந்து சென்ற கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தான் இன்று தமிழ் தேசிய கட்சிகளாக வெளியில் பரிணமித்து ஒரு புதிய கூட்டினை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளார்கள்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு இருக்கின்ற நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இந்த கட்சிகள் எல்லோரும் மீண்டும் வந்து இணைய வேண்டும்.
அவர்களுடைய கருத்து வேறுபாடுகளை சீர் செய்யும் முகமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீள கட்டியமைக்கப்பட்டு, செழுமைப்படுத்தப்பட்டு அனைவரும் ஒன்றாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக பயணிப்பதையே தமிழ் மக்கள் விரும்புகிறார்கள்.
அதுவே எங்களது மக்களின் அரசியல் எதிர்காலத்திற்கு பலம் சேர்க்கும் என்று எமது கட்சி கருத்துகின்றது.ஆகவே புதிய கூட்டுக்கள், புதிய பெயர்கள் தமிழ்த் தேசியத்திற்கு அவசியமில்லாத ஒன்றாக எமது கட்சி கருதுகின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அனைவரும் ஒன்றாக இணைந்து பயணிப்பதற்கான வழிவகைகளை செய்து அதனை நாங்கள் முன்னெடுக்க வேண்டும் என்ற தீர்மானத்தை ரெலோ எடுத்துள்ளது.
ஐக்கியத்தை கருதி தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பது அனைத்து கட்சிகளையும் உள்வாங்கி பயணித்தது. அதில் இருந்து பிரிந்து சென்றவர்கள் தான் தமிழ்த் தேசியப் பரப்பில் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே அவர்களை சேர்ந்து புதிய கூட்டை உருவாக்குவதை விட கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மீள கட்டியெழுப்ப வேண்டும்.தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை அங்கத்துவ கட்சிகள் அனைத்தும் இணைந்து பேசி தான் முடிவுகள் அறிவிக்கப்படும்.
அதுவரை ஒவ்வொரு கட்சிகளும் தங்களுக்குள் இருக்கும் அபிப்பிராயங்களை தெரிவிக்கலாம். இருந்தாலும் கூட்டமைப்பின் வேட்பாளர் யார் என்பதை அங்கத்துவ கட்சிகள் சேர்ந்து பேசி எடுக்கும் முடிவு தான் இறுதியாகும்.
தமிழரசுக் கட்சி போல் தமிழ் ஈழ விடுதலைக் இயக்கமும் சிறந்த ஒரு முதலமைச்சர் வேட்பாளரை இனங்கண்டு பிரேரிப்பதற்கான சந்தர்ப்பங்கள் கூட எதிர்காலத்தில் இருகின்றது. ஆகவே அங்கத்துவ கட்சிகள் கூடி முடிவெடுத்தே அந்த விடயம் தீர்மானிக்கபடும் என்று கூறியுள்ளார்.



