வீட்டுத்திட்டம் அமைக்கப்பட்ட போதும் உரிய அடிப்படை வசதிகள் இல்லை : பொதுமக்கள் குற்றச்சாட்டு (Video)
வீட்டுத்திட்டம் அமைக்கப்பட்டு மக்கள் குடியேரிய போதிலும் உரிய அடிப்படை வசதிகள் இன்னும் செய்து தரப்படவில்லை என ஒதியமலை கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்ப்பட்ட ஒதியமலை கிராம அலுவலர் பிரிவில் கடந்த 2017ம் ஆண்டு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் 26 பேருக்கான வீட்டுத்திட்டம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
குறித்த வீட்டுத்திட்டம் அமைக்கப்பட்ட காலத்தில் இங்கு வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டவர்களுக்கு அரை ஏக்கர் காணி வழங்கப்பட்ட தோடு மின்சாரம், வீதி, குடிநீர் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என உறுதிமொழி வழங்கப்பட்டது.
ஒவ்வொருவருக்கும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முகமாக இரண்டு ஏக்கர் வயல் நிலங்களும் வழங்கப்படுமென உறுதிமொழி வழங்கப்பட்டிருந்தது.
இவ்வாறான நிலையில் குறித்த பகுதியில் வீட்டுத்திட்டம் அமைக்கப்பட்டு மக்கள் குடியேறிய போதும் உரிய அடிப்படை வசதிகள் இன்னும் செய்து தரப்படவில்லை என மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.
அனைவருக்கும் இலவச மின்னிணைப்புக்கள் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டாலும் இறுதியில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் ஒரு இலட்சம் ரூபா கடன் வழங்கப்பட்டே மின்னிணைப்புக்களை பெற்றுக்கொண்டோம்.
இதனை தொடர்ந்து எமக்கு உறுதியளிக்கப்பட்டதற்கு அமைவாக இன்று வரை குடிநீர் வசதிகள் ஏற்படுத்தி தரப்படவில்லை, வீதிகள் புணரமைத்து தரப்படவில்லை, குடிநீர் கூட இல்லாது எவ்வாறு வாழ்வது இதனால் இங்கு குடிவந்த அரைவாசி பேர் இங்கிருந்து சென்றுவிட்டனர்.
இந்நிலையில் இங்கு அரைவாசி வீடுகளில் மக்கள் வசிப்பதில்லை, காணிகளை காடுகள் சூழ்ந்துள்ளன.
காட்டு யானைகள் அட்டாகாசம் அதிகரித்த குறித்த பகுதிகளில் வீடுகளில் வாழமுடியாத அச் சூழலில் வாழ்கிறோம். எனவே எமக்கான அடிப்படை வசதிகளை செய்துதருமாறு குறித்த மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
அவசரமாக தமக்கு குடிநீர் வசதிகளை ஏற்படுத்தி தருமாறும் வீதிகளை புனரமைத்து அனைத்து மக்களும் குடியேறக்கூடிய வசதிகளை ஏற்படுத்தி வீடுகளை பயனுள்ளதாக மாற்றி அச் சூழலில் இருந்து தம்மை விடுவிக்குமாறு கோருகின்றனர்.
குறிப்பாக குடிநீர் இன்றி வாழும் எமக்கு குடிநீர் திட்டமொன்றை ஏற்படுத்துவதாக தெரிவித்து அதற்காக வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன.
இவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட வேலைகள் திடீரென நிறுத்தப்பட்டன. இதன் பின்னர் கிராம அலுவலர் அலுவலகத்தில் குடிநீர் திட்டம் ஒன்றை ஆரம்பிப்பதற்கான நீர்த்தாங்கி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இதனூடாக ஒதியமலை கிராமத்துக்கு குடிநீர் வழங்கப்படவுள்ளதாகவும் எமது கிராமத்துக்கு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு குடிநீர்வசதி உள்ள இடத்துக்கு குடிநீர் வழங்க திட்டமிட்ட அதிகாரிகள் எம்மை புறக்கணிப்பதாக குற்றம் சுமத்துகின்றனர்.
இவ்வாறான நிலையில் கிராமத்தில் அடிப்படை வசதிகள் எதுவுமற்ற நிலையில் வாழும் தம்மை யாரும் கண்டுகொள்வதில்லை என கவலை வெளியிடுகின்றனர்.
குறிப்பாக கூலித்தொழிலில் ஈடுபடும் தாம் நாளாந்தம் ஒருகிலோ அரிசியை வாங்க கூட கஷ்டப்படுகின்றோம்.
எமக்கு இரண்டு ஏக்கர் வயல் நிலம் வழங்குவதாக தெரிவித்திருந்தனர். இருப்பினும் இன்று வரை எமக்கான வயல் நிலங்கள் வழங்கப்படவில்லை.
வயல் நிலங்கள் உள்ளவர்களுக்கு மேலும் மேலும் வயல்நிலங்களை வழங்கும் அதிகாரிகள் தம்மை புறக்கணிப்பதாக குற்றம் சுமத்துகின்றனர்.
குறிப்பாக எந்தவித அடிப்படை வசதிகளுமற்ற எங்கள் மாதிரி கிராமத்துக்கு மிக விரைவில் குடிநீர்வசதிகளை ஏற்படுத்தி தருமாறும் தமக்கு வயல் நிலங்களை வழங்கி தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவுமாறும் வீதிகளை புணரமைத்து மக்கள் அனைவரும் குடியேற செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.







