மட்டக்களப்பில் மயக்க மருந்து கொடுத்து தங்க நகைகளை கொள்ளையடித்த யுவதி
மட்டக்களப்பு - புதூர் பகுதிக்கு உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக பிரதான பேருந்து தரிப்பு நிலையத்தில் காத்திருந்த 64 வயதுடைய வயோதிப பெண்ணின் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் நேற்று புதன்கிழமை (4) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
மயக்க மருந்து கலந்து ஆபரணங்கள் கொள்ளை
குறித்த வயோதிப பெண்ணிற்கு யுவதி ஒருவர் பழச்சாறு போத்தலில் மயக்க மருந்து கலந்து கொடுத்து அவர் மயங்கியதும் அவர் அணிந்து சென்ற 35 இலட்சம் ரூபா பெறுமதியான 5 பவுண் தங்க சங்கிலி 2 அரைப் பவுண் இரண்டு காப்புக்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளார்.

இதன்போது மயக்கமடைந்த வயோதிப பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பெண் தனது வீடான பெரிய கல்லாற்றில் இருந்து மட்டக்களப்பு புதூர் பிரதேசத்திலுள்ள அவரது சகோதரியின் மகளின் வீட்டிற்கு செல்வதற்காக நேற்று பகல் 11.00 மணிக்கு அங்கிருந்து பயணிகள் போக்குவரத்து வண்டியில் ஏறி மட்டக்களப்பு பிரதான பேருந்து தரிப்பிடத்திற்கு பிற்பகல் 2.00 மணியளவில் வந்தடைந்தடைந்துள்ளார்.
இதனையடுத்து புதூருக்கு செல்வதற்கான பேருந்து 10 நிமிடத்துக்கு முன்னர் சென்றதையடுத்து அடுத்த பேருந்து வண்டிக்காக பிரதான பேருந்து தரிப்பு நிலையத்தில் காத்திருந்துள்ளார்.
இதன்போது அங்கு மோட்டார் சைக்கிளில் இளைஞர் ஒருவருடன் வந்த யுவதி பேருந்து வண்டிக்காக காத்திருந்த பெண்ணுக்கு அருகில் சென்று பேச்சு கொடுத்துக்கொண்டு தங்க ஆபரணங்களை கழற்றி கைபையில் வைக்குமாறும், இங்கு கள்ளர்கள் அதிகம் என்றும் கூறியுள்ளார்.
பொலிஸார் விசாரணை
பழச்சாறு போத்தலை கொடுத்து அதனை குடிக்குமாறு பலதடவை கேட்டுக் கொண்டதை அடுத்து அதனை குடித்த பின்னர் வயோதிப பெண் மயக்கமடைந்துள்ளார்.

இதனையடுத்து அவரின் கைபையில் இருந்த 7 அரை பவுண் கொண்ட தங்க ஆபரணங்களை யுவதி கொள்ளையடித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞருடன் தப்பி ஓடியுள்ளார்.
இந்த நிலையில் மாலை 5.30 மணியளவில் பேருந்து தரிப்பிடத்திற்கு சென்ற பெண் ஒருவர் குறித்த வயோதிப பெண் அங்கு கிடப்பதாக அவரின் உறவினருக்கு தெரியப்படுத்தி அவரை உடனடியாக மட்டு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதித்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.