நித்திரையில் இருந்த பெண்ணின் கழுத்தில் இருந்து சூட்சமான முறையில் தாலிக்கொடி திருட்டு
அம்பாறை கோளாவில் பொலிஸ் பிரிவிலுள்ள ஆலையடிவேம்பு பிரதேசத்தில் வீட்டில் நித்திரையில் இருந்த பெண் ஒருவரின் கழுத்தில் இருந்த சுமார் 13 இலட்சம் ரூபா பெறுமதியான 10 அரை பவுண் நிறை கொண்ட தாலிக்கொடியை வெட்டி கொள்ளையடித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த கொள்ளை சம்பவம் நேற்று (11) அதிகாலையில் இடம்பெற்றுள்ளதாக கோளாவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆலையடிவேம்பு குருக்கல் வீதியில் உள்ள வீடு ஒன்றில் சம்பவதினமான நேற்று அதிகாலை 2.30 மணியளவில் வீட்டில் அனைவரும் ஆழ்ந்த நித்திரையில் இருந்த போது வீட்டின் யன்னல் கிறில் கம்பியை கழற்றி வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர் நித்திரையில் இருந்த பெண்ணின் கழுத்தில் இருந்த 10 அரை பவுண் கொண்ட தாலிக்கொடியை வெட்டி எடுத்துக் கொண்டு தப்பி ஓடியுள்ளார்.
இதனையடுத்து பொலிஸாருக்கு முறைப்பாடு செய்ததையடுத்து பொலிஸார் கொள்ளைச் சம்பவம் தொடர்பான விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை கடந்த 3 தினங்களுக்கு முன்னர் வாச்சிக்குடா பிரதேசத்தில் இதே பாணியில் ஒரு பெண்ணின் தாலிக்கொடியை கொள்ளையர்கள் கொள்ளையிட்டுச் சென்ற சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது
