யாழில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளருக்கு பொலிஸாரால் அச்சுறுத்தல் (Photos)
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி முருகமூர்த்தி வித்தியாசாலையில் திருட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த திருட்டு சம்பவமானது நேற்று முன்தி்னம்(03.08.2023) இடம்பெற்றுள்ளது.
இதன்போது தண்ணீர் இறைக்கும் மோட்டார், இரண்டு பித்தளை குத்துவிளக்குகள், ஒலிபெருக்கியின் இரண்டு யூனிற்றுகள், ஒரு கமரா, ஒரு ஒலிபெருக்கி சாதனம் மற்றும் ஒரு தொகை பணம் என்பன களவாடப்பட்டுள்ளன.
இதேவேளை திருட்டில் ஈடுபட்டவர்கள், ஒரு தொகை சில்லறை காசு மற்றும் ஒலிபெருக்கி சாதனத்தின் பாகங்களை வீசிவிட்டு சென்றுள்ளனர்.
ஊடகவியலாளருக்கு இடையூறு
இது குறித்து செய்தி சேகரிப்பதற்காக ஊடகவியலாளர் ஒருவர் குறித்த பாடசாலைக்கு சென்று, தடயங்களை புகைப்படம் எடுக்க முயன்றுள்ளார்.
இதன்போது அங்கு கடமையில் இருந்த உதவி பொலிஸ் பொறுப்பதிகாரி அமைதியாக இருந்துள்ளதுடன் சிவில் உடையிலிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஊடகவியலாளரை புகைப்படம் எடுக்க வேண்டாம் என தடுத்து வெளியேற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த ஊடகவியலாளர் சம்பவம் நிகழ்ந்த அறைக்கு வெளியே வந்து நின்ற வேளை, உதவிப் பொலிஸ் பொறுப்பதிகாரி மற்றும் ஏனைய பொலிஸாரை அழைத்து வந்த குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் ஊடகவியலாளரை பாடசாலை வளாகத்தில் இருந்து வெளியேறுமாறு அச்சுறுத்தியுள்ளார்.

இதன்போது அங்கிருந்த இன்னொரு பொலிஸ் உத்தியோகத்தர் , செய்தி சேகரிப்பதற்கான அனுமதிப்பத்திரத்தை காண்பிக்குமாறு கூறியுள்ளார்.
அதற்கு குறித்த ஊடகவியலாளர், அப்படி எந்த ஒரு அனுமதிப்பத்திரமும் நடைமுறையில் இல்லை. ஊடகவியலாளர் அடையாள அட்டை இருக்கிறது.அதனை வேண்டுமானால் காட்டலாம். என கூறியவேளை, குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் அனுமதிப்பத்திரத்தை கேட்டு மிரட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு
இந்நிலையில் அந்த ஊடகவியலாளர், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் அவர்களை தொடர்புகொண்டு சம்பவம் தொடர்பில் தெரியப்படுத்தியுள்ளார்.
இது குறித்து விரைந்து செயற்பட்ட த.கனகராஜ், வட்டுக்கோட்டை பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு சம்பவம் தொடர்பில் தொலைபேசி ஊடாக அறிவித்துள்ளார்.

அங்கு கடமையில் இருந்த பொலிஸாருக்கு அழைப்பு மேற்கொண்ட வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , ஊடகவியலாளரின் பணிக்கு இடையூறு விளைவிக்க வேண்டாம் எனவும் அவரது பணிகளை செய்ய அனுமதிக்குமாறு கூறியுள்ளார்.
குறித்த ஊடகவியலாளர், இந்த பொலிஸ் உத்தியோகத்தரின் முறையற்ற செயற்பாடுகளுக்கு எதிராக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ள நிலையில் அது குறித்து விசாரணைகளும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |






ஈஸ்வரி பற்றி வந்த போன் கால், பதற்றத்தில் நந்தினி, என்ன ஆனது... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
கொத்தாக 15 பேர்களைப் பலி வாங்கிய தந்தையும் மகனும்: கடுமையான முடிவெடுக்கும் அவுஸ்திரேலியா News Lankasri