மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தினுள் நீதி கேட்டு நுழைந்த பெண்
வனவள திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்ட தனது காணியை விடுவிக்கக் கோரி பலவருடங்களாகப் போராடிய பெண் ஒருவர் இதுவரை நியாயம் கிடைக்காத நிலையில், மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று இடம்பெற்றபோது குறித்த கூட்டத்திற்குள் அத்துமீறி நுழைந்து ஆளுநரிடம் பிரச்சினையை எடுத்துக் கூற முயன்றமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
முருங்கன் பிட்டி பகுதியைச் சேர்ந்த சீவரத்தினம் தயாள சீலி என்ற பெண்ணுக்குச் சொந்தமான 15 ஏக்கர் காணி வனவள திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்டு சுமார் ஐந்து வருடங்கள் கடந்துள்ளது.
எனினும் இது வரை தனது காணி விடுக்கப்படாத நிலையில் மிகுந்த சிரமத்தின் மத்தியில் உணவுக்கே வழியின்றி தனது 75 வயதான தாயுடன் வாழ்க்கை நடாத்தி வருகின்றார்.
குறித்த பிரச்சினை தொடர்பாகப் பிரதேச செயலகம் , அமைச்சர்கள், ஒருங்கிணைப்புக் குழு, ஜனாதிபதி செயலகம் , மாவட்ட செயலகம் உட்படப் பல இடங்களுக்கு நேரில் சென்றுமுறையிட்டும் கடிதங்கள் அனுப்பியும் இதுவரை முடிவுகள் எதுவும் வழங்கப்படவில்லை.
இந்த நிலையில் இன்று வியாழக்கிழமை (4) காலை மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற நிலையில், குறித்த கூட்டத்திற்கு வருகை தந்து நேரடியாக நீதி கோரி கூட்டத்திற்குள் நுழைந்த போது குறித்த பெண்ணுக்குப் பாதுகாப்பு தரப்பினரால் உள்ளே நுழைய அனுமதி வழங்கப்படவில்லை.
எனினும் குறித்த பெண் தனக்கான நீதியை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பேசி தீர்த்துத் தர வேண்டும் எனக் கோரி கூட்டம் முடியும் வரை காத்திருந்த போதிலும் ஏமாற்றமே மிஞ்சியது.
இருப்பினும் கூட்டம் நிறைவடைந்த பின்னர் தனது கோரிக்கை அடங்கிய மகஜரை வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் அவர்களிடம் இறுதியில் ஒப்படைத்தார்.
குறித்த பெண்ணுக்கு அண்மையில் ஏற்பட்ட விபத்தில் 15 இடங்களில் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், தலை உட்படப் பல பகுதிகள் தகடுகள் வைக்கப்பட்டநிலையில் நோயுடன் போராடி வருகின்ற நிலையில், மேற்படி வனவள திணைக்களம் காணியை கையகப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





கேரளாவில் நிற்கும் பிரித்தானிய F-35 போர் விமானம்: இந்தியாவிற்கு லட்சங்களில் கிடைக்கும் வருமானம் News Lankasri

உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri
